திருச்சி மலைக்கோட்டை தாயுமானவர் சுவாமி கோவில் யானை லட்சுமி குளிப்பதற்கு அதிக வசதிகளுடன் ஏற்பாடுகள் செய்யப்பட்ட ஷவர் குளியல் தொட்டி திருச்சி நாகநாதர் கோவில் தெப்பக்குளம் அருகில் அமைக்கப்பட்டு இன்று திறக்கப்பட்டது. இந்நிகழ்விற்கு திருச்சி மலைக்கோட்டை தாயுமானசுவாமி கோவில் உதவி ஆணையர் விஜயராணி கலந்து கொண்டு தொடங்கி வைத்தார்.
அதனைத் தொடர்ந்து மலைக்கோட்டை கோவில் யானை லட்சுமியை பாகான் குளியல் தொட்டிக்கு அழைத்து வந்து உள்ளே இறங்கினார். தொட்டியில் இருந்த தண்ணீரை கண்டதும் யானை இலட்சுமி சந்தோசத்தில் துள்ளி குதித்து தண்ணீரில் குதூகலமாக விளையாடி கொண்டிருந்தது இருந்தது. மேலும் ஷவர் திறக்கப்பட்டு தண்ணீர் மழை போல் தொட்டியில் விழுந்ததும் யானை லட்சுமி சந்தோஷத்தில் தண்ணீரை பீச்சி அடித்து உற்சாக குளியல் போட்டது இதனை பார்த்த பொதுமக்கள் தங்கள் செல்போன் மூலம் வீடியோ பதிவு எடுத்துக்கொண்டனர்.
அதனைத் தொடர்ந்து திருச்சி மலைக்கோட்டை தாயுமானசுவாமி கோவில் உதவி ஆணையர் விஜயராணி நிருபர்களுக்கு பேட்டியளித்தார். அப்போது அவர் கூறுகையில்;-
இந்து சமய அறநிலையத்துறை ஆணையரின் வழிகாட்டுதலின் படியும், அமைச்சர் சேகர்பாபு ஆணைக்கிணங்க இன்று திருச்சி மலைக்கோட்டை தாயுமானசுவாமி கோவில் யானை லட்சுமிக்கு 4 அடி உயரத்தில், 5 லட்சம் செலவில் குளியல் தொட்டி அமைக்கப்பட்டுள்ளது. இந்த குளியல் தொட்டி மூலமாக யானை தினமும் குளிப்பதற்கு வசதிகள் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. இனி கோவில் யானை லட்சுமி குதூகலத்துடன் குளியல் தொட்டியில் குளித்து மகிழும் என தெரிவித்தார்.