தமிழகத்தில் நகர்புறங்களில் பெண்களின் பாதுகாப்பை வலுப்படுத்தும் நோக்கில் ரூபாய் 12 கோடி செலவில் தொடங்கப்பட்ட 80 பிங்க் ரோந்து வாகனங்களை தமிழக முதலமைச்சர் மு க ஸ்டாலின் நவம்பர் 11ஆம் தேதி சென்னை தலைமைச் செயலகத்தில் தொடங்கி வைத்தார். திருச்சி மாநகரில் பெண்கள் மற்றும் குழந்தைகளுக்கு எதிரான குற்றங்களை தடுக்க திருச்சி மாநகரத்திற்கு ஒதுக்கீடு செய்யப்பட்ட 7 பிங்க் ரோந்து வாகனங்களை இன்று மாநகர காவல் ஆணையர் அலுவலக வளாகத்தில் மாநகர காவல் ஆணையர் காமினி அவர்கள் பார்வையிட்டு பயன்பாட்டிற்கு கொண்டுவந்து, பெண் சிறப்பு உதவி ஆய்வாளர்கள் மற்றும் ஓட்டுநர்களுக்கு அறிவுரை வழங்கினார்.

ரோந்து வாகன ஓட்டுனர்கள் மற்றும் பெண் சிறப்பு உதவி ஆய்வாளர்கள் அனைவரும் தங்கள் வீட்டு பெண்கள் மற்றும் குழந்தைகளின் மேல் காட்டும் அக்கறை போல் அனைத்து பெண்கள் மற்றும் குழந்தைகளை பாவித்து பாதுகாப்பு பணிபுரிய வேண்டும் என்றும் , பணி நேரத்தில் உயர்ந்த ஒழுக்கத்துடன் கண்ணியத்துடனும் நடந்து கொள்ள வேண்டும் என்றும், பெண்கள் மற்றும் குழந்தைகளின் பாதுகாப்பை உறுதி செய்வதில் கண்ணும் கருத்துமாக செயல்பட வேண்டும் என அறிவுரை வழங்கினார். திருச்சி மாநகரில் உள்ள கண்டோண்மென்ட், பொன்மலை, கேகே நகர், ஸ்ரீரங்கம், காந்தி மார்க்கெட், தில்லைநகர் ஆகிய 6 காவல் நிலையங்களில் தலா ஒரு வாகனமும், பஞ்சப்பூர் ஒருங்கிணைந்த பேருந்து நிலையம் மற்றும் அதனை சுற்றியுள்ள பகுதிகளை கண்காணிக்க ஒரு வாகனம் என மொத்தம் 7 இடங்களில் இந்த ரோந்து வாகனங்கள் இயக்கப்பட உள்ளதாக ஆணையர் தெரிவித்தார்.

ஒவ்வொரு வாகனத்திலும் இரண்டு பெண் சிறப்பு உதவி ஆய்வாளர்கள் சுழற்சி முறையில் பணியமர்த்தப்பட்டு பெண்கள் மற்றும் குழந்தைகளின் பாதுகாப்பை உறுதி செய்யும் வகையில் பணிபுரிவார்கள். இந்த வாகனம் திருச்சி மாநகர காவல் கட்டுப்பாட்டு அறையுடன் ஜிபிஎஸ் மூலம் இணைக்கப்பட்டுள்ளது. மேலும் வாகனத்தில் உடனடி செய்தி பகிர்விற்கு வாக்கி டாக்கி சாதனத்துடன் பொதுமக்களுக்கு அறிவிப்புகள் தெரிவிக்க பப்ளிக் அட்ரஸ் சிஸ்டம் பொருத்தப்பட்டுள்ளது. சைரன் ஒலிப்பான் மற்றும் ஒளிரும் நீல சிவப்பு விளக்கு பொருத்தப்பட்டு திருச்சி மாநகரில் காலை மாலை நேரங்களில் பள்ளி கல்லூரி பகுதிகளிலும், மற்ற நேரங்களில் பெண்கள் நடமாட்டம் அதிகமாக உள்ள இடங்கள் கண்டறியப்பட்டு இரவு ரோந்து செய்ய வேண்டுமென ஆணையர் அறிவுறுத்தியுள்ளார்.
