திருச்சியில் தந்தை பெரியார் அரசு மற்றும் கலை அறிவியல் கல்லூரியில் தமிழ்நாடு முதலமைச்சர் உத்தரவின் பெயரில் 6.2 கோடி மதிப்பீட்டில் பாரம்பரிய இரண்டு கட்டடங்களை புணரமைப்பு செய்வதற்கான விழா இன்று நடைபெற்றது. இந்த விழாவில் திருச்சி சிவா எம்.பி கலந்துகொண்டு புனரமைப்பு பணிகளை தொடங்கி வைத்தார். இதனைத் தொடர்ந்து செய்தியாளர்களிடம் திருச்சி சிவா எம்.பி பேசுகையில்… திருச்சியில் பெரியார் பெயரில் அமைந்துள்ள அரசு கலை அறிவியல் கல்லூரியில் 1965 ஆம் ஆண்டு பெரியார் தந்த நிதியிலிருந்து அவர் வாங்கிய நிலங்கள் கட்டிடங்களுடன் இந்த கல்லூரி உருவாக்கப்பட்டது. இப்போது இந்த கல்லூரிக்கு 70 ஆண்டுகள் ஆகின்றன. இந்த கல்லூரியில் என்னைப் போன்ற நிறைய பேர் படித்துள்ளனர். இந்த கல்லூரி மீது மிகுந்த ஈடுபாடு எனக்கு உண்டு, ஏழை, எளிய, பிற்படுத்தப்பட்டோர், தாழ்த்தப்பட்டோர் என சாதாரண மாணவர்களுக்காக தொடங்கப்பட்ட கல்லூரி இன்று 5000 பேர் படிக்கக்கூடிய அளவிற்கு உயர்ந்து இருக்கிறது.

இந்த கல்லூரியில் பழமை வாய்ந்த இரண்டு கட்டிடங்கள் உள்ளன அந்த கட்டிடங்கள் பெரியார் சிரமப்பட்டு வழக்கு தொடுத்து அதன் மூலமாக நிலைநிறுத்திய கட்டிடங்கள் தான் லங்கா கட்டிடம் டக்கோயா கட்டிடம் நான் பி.ஏ, எம்.ஏ படித்தது இங்கே தான், நான் மிசாவில் கைதாகி சென்று தேர்வு எழுதியதும் இங்கேதான், இந்த இடைப்பட்ட காலத்தில் இந்த கட்டிடம் பயன்படாத ஒன்று என பொதுப்பணித்துறை முடக்கி வைத்தது, இந்த கட்டிடத்தை இடிக்கின்ற நிலையில் வந்த போது தான் புனரமைப்பு என்ற திட்டத்தின் கீழ் தமிழ்நாடு அரசு நிதி ஒதுக்கீடு செய்கின்றது என்று அறிந்து தமிழக முதலமைச்சரிடம் கோரிக்கை வைத்தேன். இந்நிலையில் தமிழ்நாடு அரசு ரூபாய் 6.2 கோடி நிதி ஒதுக்கீடு செய்திருக்கிறது. இதற்காக தமிழ்நாடு முதலமைச்சர் மற்றும் துணை முதலமைச்சர் ஆகியோருக்கு முன்னாள் மாணவர் சங்கத்தின் சார்பாக என் நெஞ்சார்ந்த நன்றியை தெரிவித்துக் கொள்கிறேன். தற்போது கட்டிடம் பணிகள் தொடங்குவதற்கான தொடக்கம் நடைபெற்றிருக்கிறது. இந்த கட்டிடத்தை புதுப்பிப்பதற்காக பயன்படுத்தக்கூடிய பொருட்கள் ஜாதிக்காய், சுண்ணாம்பு, கடுக்காய், கருப்பட்டி, தயிர், பழங்காலத்து செங்கற் கற்கள், போன்றவற்றை பயன்படுத்தி பழமை மாறாமல் புனரமைப்பு பணிகள் நடைபெறுவதாக தெரிவித்தார்.
