கொரோனா பேரிடரையொட்டி ஊரடங்கு அறிவிக்கப்பட்டபோது அனைத்து ரயில்களும் நிறுத்தப்பட்டது . பின்னர் படிப்படியாக ஊரடங்கு விலக்கிக் கொள்ளப்பட்டபோது மீண்டும் ரயில்கள் இயக்கப்படுகிறது . ஆனாலும் , இந்தியாவின் பெரும்பகுதி மக்கள் அன்றாட வாழ்வாதாரத் தேவைகளுக்கான பயணங்களுக்காக பயன்படுத்தும் சாதாரண பயணிகள் ரயில் இன்னும் இயக்கப்படாத நிலை உள்ளது . இதனால் பெரும் பகுதி மக்கள் சொல்லொணா சிரமத்தை சந்தித்து வருகிறார்கள் . எனவே , ஒன்றிய அரசும் , ரயில்வே துறையும் மிகவும் குறைந்த கட்டணத்தில் எளிய மக்கள் பயணம் செய்வதற்கு வாய்ப்பாக இருக்கும் | சாதாரண பயணிகள் ரயிலை உடனடியாக இயக்குவதற்கு நடவடிக்கை எடுக்க வேண்டும் . தற்போது இயக்கப்படும் ரயில்கள் சிறப்பு ரயில்கள் என்ற பெயரிலேயே இயக்கப்படுகிறது . இந்த ரயில்களில் முதியோர்கள் , மாற்றுத் திறனாளிகள் , கேன்சர் உள்ளிட்ட அரிய நோய்களால் பாதிக்கப்பட்டவர்கள் , விளையாட்டு | வீரர்கள் , மாணவர்கள் , தேசிய அளவில் விருது பெற்றவர்கள் , 5 முதல் 12 வயது வரையுள்ள குழந்தைகள் போன்றோருக்கு ஏற்கனவே வழங்கப்பட்டு நடைமுறையில் இருந்த அனைத்து கட்டண சலுகைகளும் மறுக்கப்படுகிறது .
எனவே , ரயில்களை ஏற்கனவே இயங்கிய பெயர்களில் இயக்கவும் ரயில் பயணிகளுக்கு வழங்கப்பட்டு வந்த கட்டண சலுகைகளை மீண்டும் வழங்கவும் நடவடிக்கை எடுக்க வேண்டுமென ஒன்றிய அரசையும் , ரயில்வே துறையையும் இந்திய ஜனநாயக வாலிபர் சங்கம் வலியுறுத்துகிறது . கொரோனா பேரிடருக்குப் பிறகு இயக்கப்படும் ரயில்களில் மாற்றுத் திறனாளிகளுக்கான பெட்டிகளில் மாற்றுத்திறனாளிகள் பயணம் செய்ய அனுமதிக்கப்படவில்லை . பொதுவான பெட்டிகளிலேயே மாற்றுத்திறனாளிகள் பயணிக்க வேண்டிய கட்டாயம் உள்ளது . இந்த பெட்டிகளில் உள்ள கழிவறைகளை மாற்றுத்திறனாளிகள் பயன்படுத்த இயலாமல் அல்லல் படுகின்றனர் . எனவே , மாற்றுத்திறனாளிகளுக்கான பெட்டிகளில் மாற்றுத்திறனாளிகள் பயணிப்பதற்கு உடனடியாக நடவடிக்கை எடுக்கவேண்டும் . மேற்கண்ட கோரிக்கைகளை உடனடியாக நிறைவேற்றித் தருமாறு கேட்டுக் இந்திய ஜனநாயக வாலிபர் சங்கம் மாவட்ட செயலாளர் லெனின் தலைமையில் இன்று காலை திருச்சி ஜங்ஷன் ரயில் நிலையத்தில் உள்ள திருச்சி ரயில்வே கோட்ட மேலாளர் அலுவலகத்தில் மனு அளிக்க வந்தனர்.