திருச்சி மத்திய பஸ் நிலையம் பகுதியிலுள்ள மாநகர பேருந்துகள் நிற்கும் இடத்தில் இன்று மதியம் போதை ஆசாமி ஒருவர் அங்கு தள்ளுவண்டி கடையில் இருந்த பெண்ணிடம் தவறாக பேசியதாக கூறி அப்பகுதியில் தள்ளுவண்டி கடைகள் நடத்தி வரும் வியாபாரிகள், மற்றும் ஆட்டோ ஓட்டுனர்கள் என 10க்கும் மேற்பட்டோர் போதை ஆசாமியை சரமாரியாக அடித்து துவைத்தனர்.
மேலும் ஒரு கட்டத்தில் வாலிபர் ஒருவர் திடீரென தனது தோளில் போட்டிருந்த துண்டை எடுத்து போதை ஆசாமியின் கழுத்தில் சுற்றி கீழே தள்ளி மரண அடி அடித்து எட்டி உதைத்தனர்.
இதில் போதை ஆசாமியின் தலை மற்றும் முகத்தில் பெரும் காயம் ஏற்பட்டது. குறிப்பாக இன்று பொங்கல் பண்டிகை என்பதால் பஸ் நிலையத்திற்கு ஏராளமான பயணிகள் வருகை தந்திருந்தனர். சண்டையை விலக்க வந்த பயணிகளை தள்ளுவண்டி வியாபாரிகள் மற்றும் ஆட்டோ ஓட்டுநர்கள் தரக்குறைவாக பேசி அங்கிருந்து விரட்டிவிட்டனர். இந்த சண்டையால் பஸ் நிலையம் முழுவதும் பரபரப்பாக காணப்பட்டது.
இந்த சண்டை குறித்து பெண் பயணி ஒருவர் கூறுகையில்:-
போதை ஆசாமி தவறாக பேசி இருந்தால் அவரை காவல் நிலையத்திற்கு அழைத்து சென்றிருக்கலாம் அல்லது காவல்துறைக்கு தகவல் தெரிவித்து அவர்களை வரவழைத்து போதை ஆசாமியை பிடித்து கொடுத்திருக்கலாம். ஆனால் அதை விட்டுவிட்டு பத்துக்கும் மேற்பட்ட வியாபாரிகள் ஆட்டோ ஓட்டுநர்கள் ஒன்று சேர்ந்து கொண்டு இப்படி ஈவு இரக்கமின்றிக் போதை ஆசாமியை அடித்தது மனதிற்கு கஷ்டமாக இருந்ததாக தெரிவித்தனர். இது போன்ற மனிதனை ஈவு இரக்கமின்றி அடிக்க யார் இவர்களுக்கு அதிகாரம் கொடுத்தது என்ற கேள்வியும் எழுப்பினர்.
மேலும் இது குறித்து மற்றொரு பயணி ஒருவர் கூறுகையில்:- பொதுவாக திருச்சி மாநகரின் மையப்பகுதியான மத்திய பஸ் நிலையத்திலிருந்து எடமலைப்பட்டிபுதூர், பஞ்சப்பூர், மணிகண்டம் ஆகிய வழித்தடங்களுக்கு செல்வதற்கும், கருமண்டபம், தீரன் நகர், பிராட்டியூர் ஆகிய வழித்தடங்களுக்கு செல்வதற்கும் மற்றும் கீழ கல்கண்டார் கோட்டை, ஏர்போர்ட், குண்டூர் ஆகிய பகுதிகளில் செல்வதற்கு பிரதானமான அரசு மற்றும் தனியார் பஸ்கள் இங்குதான் நிற்கும் மேலும் இப்பகுதிகளுக்கு செல்வதற்காக ஏராளமான பயணிகள் மற்றும் பள்ளி , கல்லூரி மாணவ மாணவிகள் என ஏராளமானோர் வந்து செல்லும் இடமாக உள்ளது.
ஆனால் இப்பகுதியில் பஸ் பயணிகளுக்கு இடையூறாக 30-க்கும் மேற்பட்ட தள்ளுவண்டி கடைகள் போடப்பட்டும், ஆட்டோக்கள் நிறுத்தி வைக்கப்பட்டுள்ளது. இதனால் அடிக்கடி பஸ்களின் போக்குவரத்திற்கு, நடந்து செல்லும் பயணிகளுக்கு இடையூறாகவும் காணப்படுகிறது. இதுகுறித்து பலமுறை மாநகராட்சி கமிஷனரிடம் மற்றும் காவல்துறையிடம் புகார் அளித்தும் எவ்வித நடவடிக்கையும் இந்நாள்வரை எடுக்கப்படாது வேதனையிலும் வேதனை என தெரிவித்தார்.