தாம்பரம் மாநகர காவல் ஆணையரகத்தின், கூடுவாஞ்சேரி போதை பொருள் தடுப்பு பிரிவு தனிப்படை போலீசாா், மேடவாக்கம் பகுதியில் தீவிர கண்காணிப்பில் இருந்தனா்.அப்போது அப்பகுதியில் வாலிபர்கள் சிலர் போதை மாத்திரைகளை விற்பதாக போலீசாருக்கு ரகசிய தகவல் கிடைத்தது. இதை அடுத்து இன்று மதியம் மேடவாக்கம், வடக்குபட்டு பகுதியில் கண்காணிப்பில் ஈடுபட்டனர். அப்போது சில வாலிபர்கள் சண்டை போட்டுக் கொண்டிருந்தனர். அவர்களில் ஒருவரை பிடித்து விசாரித்தபோது, அவா் முன்னுக்கு பின் முரணாக பதில் கூறினாா். அவர் வைத்திருந்த வாகனத்தை சோதனை செய்தனர். அதில் போதை மாத்திரைகள் இருந்தன. இதை அடுத்து அந்த வாலிபரை பள்ளிக்கரணை காவல் நிலையத்தில் ஒப்படைத்தனர்.
பள்ளிக்காரணைபோலீசார் விசாரணையில், அவா் மேடவாக்கம், வடக்குப்பட்டு, பெரியார் நகரை சேர்ந்த குணசேகர் (23) என்று தெரியவந்தது. இதை அடுத்து அவா் வீட்டுக்கு அழைத்து சென்ற போலீசார், வீட்டில் சோதனை செய்தனர். அப்போது வீட்டில் மறைத்து வைத்திருந்த போதை மாத்திரைகள் கைப்பற்றினர். பின்னர் அவா் கொடுத்த தகவலின் பேரில் அவரது நண்பர்கள் கீழ்கட்டளை, அம்பாள் நகர், 15வது தெருவை சேர்ந்த கண்ணன் (22), தேன்மொழி நகர், 6வது தெருவை சேர்ந்த மோகன்ராஜ் (21) மற்றும் பழைய பல்லாவரம் பகுதியை சேர்ந்த தினேஷ் (20) ஆகியோரை கைது செய்தனர். பின்னர் அவர்கள் வீடுகளிலும் சோதனை செய்து, போதை மாத்திரைகளை பறிமுதல் செய்தனர். நான்கு பேர் வீடுகளிலும் மொத்தம் 17 பாக்ஸ் போதை மாத்திரைகளை போலீசார் பறிமுதல் செய்தனர். இதன் மதிப்பு சுமாா் ரூபாய் 20 லட்சம்.இதை அடுத்து நான்கு பேர் மீதும் வழக்கு பதிவு செய்த போலீசார்,இவா்களுக்கு போதை மாத்திரைகள் எங்கிருந்து வந்தது?என்று தொடர்ந்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.