தமிழக காவல்துறை இயக்குநர் உத்தரவின்பேரில் தமிழகம் முழுவதும் கஞ்சா விற்பனையில் ஈடுபடும் நபர்கள் மீது எடுக்கப்படும் நடவடிக்கையின் தொடர்ச்சியாக இந்த மாதம் 01.05.2023-ம்தேதி முதல் 15.05.23-ம்தேதி வரை 15 நாட்கள் “கஞ்சாவேட்டை 4.0”-ன்படி நடவடிக்கை எடுக்க உத்தரவிட்டதின்பேரில், திருச்சி மாநகர காவல் ஆணையர் சத்திய பிரியா திருச்சி மாநகரத்தில் இளைஞர்களின் எதிர்காலத்தை சீரழிக்கும் கஞ்சா விற்பனையில் ஈடுபடும் குற்றவாளிகளை கண்டறிந்து, அவர்கள்மீது சட்டரீதியான நடவடிக்கை மேற்கொள்ள, திருச்சி மாநகர காவல் துணை ஆணையர்கள் வடக்கு மற்றும் தெற்கு, சரக உதவி ஆணையர்கள் மற்றும் காவல் ஆய்வாளர்களுக்கு உரிய அறிவுரைகள் வழங்கப்பட்டது.
அதன்படி, கடந்த ஆறு நாட்களில் திருச்சி மாநகரத்தில் பள்ளி மாணவர்கள் மற்றும் கல்லூரி மாணவர்களின் எதிர்கால நலனை பாதுகாக்கும் பொருட்டு, பள்ளி கல்லூரிகள் அருகாமையிலும் மற்றும் பொது இடங்களில் கஞ்சா போதை பொருட்களை விற்பனை செய்ததாக 21 நபர்களை அதிரடியாக கைது செய்து நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.
அதில் எடமலைபட்டிபுதூர் காவல்நிலைய பகுதியில் கஞ்சாவை விற்பனை செய்ததாக 5 நபர்கள் மீதும், கோட்டை காவல்நிலையத்தில் 4 நபர்கள் மீதும், காந்திமார்க்கெட் காவல்நிலையத்தில் 4 நபர்கள் மீதும், உறையூர் காவல்நிலையத்தில் 4 நபர்கள் மீதும், ஸ்ரீரங்கம் காவல்நிலையத்தில் 2 நபர்கள் மீதும், பாலக்கரை மற்றும் தில்லைநகர் காவல்நிலையத்தில் தலா ஒரு நபர் மீது என ஆக மொத்தம் 21 வழக்குகள் பதிவு செய்யப்பட்டும், வழக்கின் குற்றவாளிகளான 21 நபர்களை கைது செய்தும், அதில் இரண்டு நபர்களை நீதிமன்ற காவலுக்கு அனுப்பியும், அவர்களிடமிருந்து சுமார் ஒரு லட்சம் மதிப்புள்ள 4கிலோ 750 கிராம் கஞ்சாவையும், ஒரு செல்போன் மற்றும் ஒரு இருசக்கர வாகனம் ஆகியவற்றையும் பறிமுதல் செய்து நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.