திருச்சி மாநகராட்சிக்குட்பட்ட டி.வி.எஸ் டோல்கேட் அருகே உள்ள முடுக்குப்பட்டி பகுதியில் என் வாக்குச்சாவடி வெற்றி வாக்குச்சாவடி பிரச்சாரத்தை பள்ளி கல்வி துறை அமைச்சரும், திருச்சி திமுக தெற்கு மாவட்ட செயலாளருமான அன்பில் மகேஷ் தொடங்கி வைத்தார். அங்கு வாக்குச்சாவடி முகவர்களிடம் எவ்வாறு பிரச்சாரம் மேற்கொள்ள வேண்டும் என அறிவுரை வழங்கினார். தொடர்ந்து செய்தியாளர்களிடம் பேசிய அமைச்சர் அன்பில் மகேஷ்:- பெண்களுக்கு தன்னம்பிக்கை அளிக்கும் வகையில் மகளிர் உரிமை தொகை உள்ளது. ரூ.1000 பணத்தை வைத்து அடிப்படை தேவைகளை பூர்த்தி செய்து கொள்ள முடியும். கலைஞர் மகளிர் உரிமை தொகை திட்டம் மற்ற மாநிலங்களில் நடைமுறைப் படுத்தப்படுவது தான் இந்த திட்டத்தின் வெற்றி.

திராவிட இயக்கம் ஆட்சிக்கு வரும் போது பெண்களின் மேம்பாட்டுக்கான திட்டத்தை செயல்படுத்தி வருகிறோம் அதனால் இரட்டை இலக்க பொருளாதார வளர்ச்சியை அடைந்துள்ளோம். ஆட்சிக்கு வந்த போது இருந்த நிதி நெருக்கடிகளை சரி சரி செய்ய திட்டங்கள் நிறைவேற்றப்பட்டு வருகிறது. அப்படி தான் மகளிர் உரிமை தொகையும் வழங்கப்படுகிறது. தேர்தலுக்காக இதை செய்யவில்லை திமுக அளித்த தேர்தல் வாக்குறுதிப்படி நாங்கள் நிறைவேற்றி வருகிறோம். அடுத்த 15 ஆண்டுகாலம் நிச்சயம் திமுக தான் ஆட்சியில் இருக்கும். யார் என்ன விமர்சனங்கள் வைத்தாலும் இந்த திட்டம் தொடர்ந்து செயல்படுத்தப்படும். மாணவர்களுக்கு மடிக்கணினி வழங்குவது தொடர்பாக டெண்டர் விடப்பட்டுவிட்டது. டிசம்பர் இறுதி அல்லது ஜனவரி முதல் வாரத்தில் மடிக்கணினி வழங்கப்படும் என்றார்.
