அம்மா மக்கள் முன்னேற்றக் கழகத்தின் பொதுச்செயலாளர் டிடிவி தினகரன் அவர்களின் ஆணைக்கிணங்கவும், திருச்சி தெற்கு மாவட்ட செயலாளரும், முன்னாள் மாமன்ற உறுப்பினருமான செந்தில்நாதன் அவர்களின் வழிகாட்டுதலின்படி திருச்சி மலைக்கோட்டை தாயுமானவர் தெருவில், பொதுமக்களுக்கு இடையூறாக புதிதாக கார் பார்க்கிங் அமைப்பதற்கு எதிர்ப்பு தெரிவித்து, பொதுமக்கள் சார்பாக பொதுமக்கள் கையெழுத்திட்ட மனுவை, மாவட்ட ஆட்சியாளர் மற்றும் மாநகர மேயரிடம், அம்மா மக்கள் முன்னேற்ற கழகத்தினர் கோரிக்கை மனுவாக அளித்தனர்:-
அந்த மனுவில், திருச்சி “மலைக்கோட்டை தாயுமானவர் தெருவில் பொதுமக்கள் பயன்பாட்டிற்காக பொது கழிப்பிடம் பல ஆண்டுகளாக இருந்து வந்தது. அது பழமையடைந்து விட்டதால் அதனை இடித்து விட்டு புதியதாக நவீன பொது கழிப்பிடம் கட்டுவதாகக் கூறி இடித்தனர். ஆனால் சொன்னவாறு அந்த இடத்தில் பொது மக்கள் பயன்பாட்டிற்காக கழிப்பழிடம் கட்டாமல் அதற்கு பதிலாக திருச்சி மாநகராட்சி சார்பில் கார் பார்க்கிங் அமைப்பதற்காக ஒப்பந்தம் (டெண்டர்) கோர இருப்பதாக நாளிதழ்களில் செய்தி வந்ததை கண்ட இப்பகுதி மக்கள் மிகவும் அதிர்ச்சியடைந்து உள்ளனர். ஏனேனில் பொது கழிப்பிடத்தை இப்பகுதி மக்கள் மட்டுமில்லாமல் மலைக்கோட்டைக்கு வரும் சுற்றுலா பயணிகளும் பயன்படுத்தி வந்தனர். தற்போது இந்த இடத்தில் கார் பார்க்கிங் அமைத்தால் ஏற்கனவே மலைக்கோட்டையை சுற்றியுள்ள தெருக்கள் அனைத்தும் குறுகலாக உள்ளதால் சுற்றுலா வரும் பயணிகளின் நான்கு சக்கர வாகனங்களால் அதிக போக்குவரத்து நெருக்கடி ஏற்பட்டு வாகனங்கள் எளிதாக வந்து செல்ல முடியாத சூழ்நிலை ஏற்படுவதற்கு அதிக வாய்ப்பு உள்ளது.
மக்கள் பயன்படுத்தும் கழிப்பிடத்தை இடித்துவிட்டு, கார் பார்க்கிங் அமைப்பதற்கு ஆட்சேபனம் தெரிவித்து, அம்மா மக்கள் முன்னேற்றக் கழகத்தினர் கலெக்டர் சரவணனிடம் மனு அளித்தனர்:-
மேலும் திருவிழாக் காலங்களில் சாமி வீதிவுலா வரும் போது மிகுந்த சிரமம் ஏற்படுவதற்கு அதிக வாய்ப்பு உள்ளது. அதுவும் கார் பார்க்கிங் அமைப்பதாக கூறும் தாயுமான தெருவானது மிகவும் குறுகலான தெருவாக உள்ளதால் நான்கு சக்கர வாகனங்சகள் வந்து செல்வதில் மிகுந்த சிரமத்திற்கு உள்ளாக வாய்ப்பு உள்ளது. கார் பார்க்கிங்கில் இருந்து வரும் வாகனங்கள் தாயுமான தெருவில் இருந்து திரும்பும் போதும், சின்னக்கடை தெருவில் இருந்து மலைக்கோட்டைக்கு கார் பார்க்கிங்கிற்கு செல்லும் வாகனங்கள் திரும்பும் போதும் தெருவானது அகலமில்லாத காரணத்தால் வாகனங்கள் அனைத்தும் வரிசையாக நின்று அதிக போக்குவரத்து நெருக்கடி ஏற்படுவதற்கு அதிக வாய்ப்பு உள்ளது. இதனால் மலைக்கோட்டை பகுதியை சுற்றி வசித்து வரும் பொது மக்கள் அனைவரும் மிகுந்த சிரமத்திற்கு ஆளாவார்கள். அவசரக்காலங்களில் ஒரு ஆம்புலன்ஸ் வாகனம் கூட வந்து செல்ல முடியாத சூழ்நிலை ஏற்படுவதற்கு வாய்ப்பு ஏற்பட்டு பொது மக்கள் மிகுந்த சிரமத்திற்கு ஆளாவார்கள்.
இது சம்பந்தமாக பொதுமக்கள் ஏற்பனவே இப்பகுதியின் மாநகராட்சி உதவி பொறியாளர் அவர்களிடம் சூழ்நிலையை எடுத்து சொல்லி இங்கு கார் பார்க்கிங் அமைக்க வேண்டாம் என்று எடுத்து கூறியும் பொது மக்களின் நலனை கருத்தில் கொள்ளாமல் கார் பார்க்கிங் அமைப்பதற்கு ஒப்பந்தம் கோரியுள்ளது பொது மக்களின் நலனை பாதிக்கும் வகையில் உள்ளது. எனவே கணம் ஐயா அவர்கள் மலைக்கோட்டை தாயுமானவர் தெருவில் கார் பார்க்கிங் அமைக்க வேண்டாம் என மக்கள் சார்பாக தங்களிடம் கோரிக்கை வைக்கிறேன்” என்று கூறப்பட்டுள்ளது. அம்மா மக்கள் முன்னேற்ற கழகம், திருச்சி தெற்கு மாவட்டம் சார்பாக நெசவாளர் அணி செயலாளர் மலைக்கோட்டை சங்கர் அவர்களின் ஏற்பாட்டில், நிர்வாகிகள் திருவாளர்கள் , கழக ஆட்சி மன்ற குழு உறுப்பினர் கம்ருதீன், பகுதி செயலாளர்கள் கல்நாயக் சதீஷ், மதியழகன், மாணவரணி செயலாளர் நாகூர் மீரான், வர்த்தக அணி செயலாளர் கல்லணை குணா, வட்டச் செயலாளர்கள் சுடலைமுத்து, மணிகண்டன், தகவல் தொழில்நுட்ப பிரிவு மலைக்கோட்டை அஸ்வின் ஆகியோர் மனு அளித்தனர்.