தமிழ்நாடு விவசாயிகள் திருச்சி மணல் மாட்டு வண்டி தொழிலாளர் சங்கம் சார்பில் திருச்சியில் உள்ள தாளக்குடி, மாதவப் பெருமாள் கோவில் மாட்டுவண்டி மணல் குவாரியை திறந்துவிட வலியுறுத்தி திருச்சி மாவட்ட கலெக்டர் அலுவலகம் அருகே இன்று ஆதார் கார்டு மற்றும் ரேஷன் கார்டுடன் மாட்டுவண்டி தொழிலாளர்கள் 500-க்கும் மேற்பட்டோர் மனு அளிக்கும் போராட்டம் நடத்தினர்.
இந்தப் போராட்டத்திற்கு சங்கத்தின் மாவட்ட தலைவர் மணிகண்டன் தலைமை தாங்கினார். இதில் சங்க மாநில ஆலோசகர் வழக்கறிஞர் வேங்கை ராஜா சிறப்பு அழைப்பாளராக கலந்து கொண்டு பேசினார். போராட்டத்தின் போது பேசியவர்கள் மணல் மாட்டு வண்டி வழியை திறந்து விடவில்லை என்றால் 5 ஆயிரம் மாடுகளையும் நரபலி கொடுப்பதை தவிர வேறு வழி இல்லை என ஆத்திரமாக தெரிவித்தனர்.
இதில் மாட்டு வண்டி சங்கத்தின் தாலுகா பொறுப்பாளர்கள் காமராஜ், மணிகண்டன், குணசேகரன், ஆனந்தன்,மாணிக்கம், ஜெயகாந்த், கார்த்திகேயன், செல்வநாதன், பாலாஜி உள்ளிட்ட திரளான மாட்டுவண்டி தொழிலாளர்கள் பங்கேற்றனர். ஆர்ப்பாட்டத்தின் போது நீதிமன்ற உத்தரவை அமல்படுத்த வேண்டும், மாட்டுவண்டி தொழிலாளர்கள் வாழவிடு, மாட்டுவண்டி தொழிலாளர்களை வாழவிடு என்பது உள்ளிட்ட கோஷங்கள் எழுப்பினர்.