மதுரை மாவட்டம், தல்லாகுளம் பகுதியில் 22 வயது உடைய ரூபாலி என்ற பெண் யானை பீகாரில் இருந்து கடந்த 2019ஆம் ஆண்டு உரிய ஆவணங்கள் இல்லாமல் வாங்கி வரப்பட்டு வளர்க்கப்படுவதாக மதுரை மாவட்ட வன துறைக்கு புகார் வந்தது. புகாரின் அடிப்படையில் கடந்த 3 வருடங்களாக விசாரணை நடைபெற்று வந்த நிலையில், முதன்மை தலைமை வன பாதுகாவலர் மற்றும் தலைமை வன உயிர் காப்பாளர் அவர்களின் உத்தரவின் பேரில் ரூபாலி யானையை பறிமுதல் செய்து, திருச்சியில் உள்ள யானைகள் மறுவாழ்வு மையத்திற்கு அனுப்பி வைக்க உத்தரவு பிறப்பிக்கப்பட்டது.
அதனைத் தொடர்ந்து நேற்று இரவு அதிரடியாக மதுரை மாவட்ட வன அலுவலர் குருசுவாமி தலைமையில் 30க்கும் மேற்பட்ட வனத்துறை அதிகாரிகள், கால்நடைத்துறை மருத்துவர்கள், காவல்துறையினர் யானையை பறிமுதல் செய்து. பலத்த பாதுகாப்புடன் திருச்சியில் உள்ள யானைகள் மறுவாழ்வு மையத்திற்கு அழைத்து வந்தனர்.
திருச்சி மாவட்டம் சிறுகனூர் அருகே உள்ள எம்.ஆர்.பாளையம் யானைகள் மறுவாழ்வு மையத்தில் ஏற்கெனவே மலாத்தி, சந்தியா, ஜெயந்தி, கோமதி, ஜமிலா , இந்து , ரோகினி , இந்திரா என்ற யானைகள் பராமரிக்கப்பட்டு வரும் நிலையில் தற்போது இந்த ரூபாலி யானை வந்துள்ளதால் மொத்தம் 9 யானைகளை திருச்சி மாவட்ட வனத்துறையினர் பராமரித்து வருகின்றனர்.