மதுரை- திருநெல்வேலி மாகராட்சி மேயர் பதவிகளை யாதவர்களுக்கு வழங்கிட கோரி தமிழக முதல்வர் மு.க ஸ்டாலின் அவர்களுக்கு பாரத முன்னேற்றக் கழக தலைவர் பாரதராஜா யாதவ் வேண்டுகோள் விடுத்துள்ளார்.
இது குறித்து தலைவர் பாரதராஜா யாதவ் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது:-
தமிழகத்தில் நடந்து முடிந்த நகர்ப்புற உள்ளாட்சித் தேர்தலில் 21 மாநகராட்சிகள் மட்டுமின்றி பெரும்பான்மை நகராட்சிகள், பேரூராட்சிகளை திமுக தலைமையிலான திராவிட. முன்னேற்றக் கழகம் கைப்பற்றிருப்பதற்கு முழு காரணம் திமுக தலைவரும், தமிழக முதல்வருமான மு க ஸ்டாலின் அவர்களின் திட்டமிட்ட முழு உழைப்பே காரணம் என்றால் அது மிகையில்லை. இதற்காக தங்களுக்கு வாழ்த்துக்களையும் – பாராட்டுதல்களையும் பாரத முன்னேற்றக் கழகம் சார்பில் தெரிவித்துக் கொள்கின்றோம்.
தமிழகத்தில் தங்கள் தலைமையிலான ஆட்சி அமைந்தகணமே அமைச்சரவையில் யாதவ சமுதாய சான்றோர்கள் இருவருக்கு பிரதிநிதித்துவம் வழங்கியதற்கு இன்றுவரை யாதவ சமுதாய மக்களில் 90 சதவீதம் பேர் வாக்குகளாக வழங்கி நன்றி கடனை அடைத்து வருகின்றனர். அமைச்சரவையில் யாதவர்களுக்கு பிரநிதித்துவம் வழங்கியது போன்று தமிழகத்தில் திராவிட முன்னேற்றக் கழகம் வென்ற 21 மாநகராசிகளில் மதுரை மற்றும் திருநெல்வேலி மாநகராட்சிக்கான மேயர் பதவிகளையும், சில நகராட்சி தலைவர் அல்லது துணைத்தலைவர் பதவிகளையும் யாதவ சமுதாயத்தினை சேர்ந்தவர்களுக்கு வழங்கிடுமாறு யாதவர்களின் அரசியல் கட்சியான பாரத முன்னேற்றக் கழகம் சார்பில் பணிவன்போடு வேண்டுகின்றோம். இவ்வாறு அந்த அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.