மக்கள் நீதி மய்யம் கட்சியின் பொதுச்செயலாளராக இருந்த முருகானந்தம் திருச்சியில் செய்தியாளர்களை சந்தித்து பேசினார். அதில், கட்சியில் இணைந்த பொழுது எனக்கான சுதந்திரமும்,ஜனநாயகமும் கொடுக்கப்பட்டதால் என்னால் கட்சியில் முழுவதும் உழைக்க முடிந்தது.ஆனால் கடந்த சில மாதங்களாக கட்சியில் ஜனநாயகம் அற்றுப்போய் விட்டது. கட்சிக்குள் ஜனநாயகம் காணமல் போய் சர்வாதிகாரம் தலை தூக்கி விட்டது.கட்சியின் தலைவர் மக்கள் நீதி மய்யத்தை நமது கட்சி என்பதை மறந்து அது என்னுடைய கட்சி என கூற ஆரம்பித்து விட்டார்.சட்டமன்ற தேர்தலில் கட்சியில் எந்த நிர்வாகிகளிடமும் கலந்தாலோசிக்காமல் பலவீனமான கட்சிகளுடன் கூட்டணி அமைத்து நூறுக்கும் அதிகமான இடங்களை கூட்டணி கட்சிகளுக்கு ஒதுக்கியது தான் தோல்வி அடைய காரணம்.எதற்காக நூறு இடங்களை கூட்டணிக்கு ஒதுக்கினார் என்பது இதுவரை தெரியவில்லை.கட்சியின் உயர்மட்ட குழு கூட்டத்தில் பல்வேறு கேள்விகளை நான் கமல்ஹாசனிடம் எழுப்பினேன் ஆனால் அவர் எதற்கும் பதில் கூறவில்லை.