திருச்சி மாவட்டத்தில் உள்ள நீராதாரங்களை காப்பாற்ற தவறிய நீதித்துறையின் அலட்சியத்தை கண்டித்தும், அடித்தட்டு மக்களின் வாழ்வாதாரக் கோரிக்கைகளை தொடர்ந்து புறக்கணிக்கும் மத்திய – மாநில அரசுகளை கண்டித்தும், திருச்சி மாவட்டம் அல்லித்துறையில் உள்ள பேரறிஞர் அண்ணா, சோமரசம் பேட்டையில் உள்ள மறைந்த முதல்வர் எம்ஜிஆர், பெருந்தலைவர் காமராசர், தந்தை பெரியார் ஆகியோரின் உருவசிலைகளிடம்,

கட்சி சார்பற்ற தமிழக விவசாயிகள் சங்கத்தினர் கோரிக்கை மனு கொடுக்கும் போராட்டத்தில் இன்று ஈடுபட்டனர். சங்கத் தலைவர் ம.ப.சின்னதுரை தலைமையில் நடைபெற்ற நூதனப் போராட்டத்தில், உய்யக்கொண்டான் ஆறு, கோரையாறு, அரியாறு, குடமுருட்டி ஆறு ஆகியவற்றில் உள்ள ஆக்கிரமிப்புகளை அகற்றி, தூர்வாரி, கரைகளை பலப்படுத்தி, சாலை அமைக்க வேண்டும்.

காவிரிப் பாசன புதிய கட்டளை கால்வாய் மற்றும் அதனை சார்ந்த, 13 ஏரிகளையும் நீதிமன்ற உத்தரவின் படி பாதுகாக்க வேண்டும் என்று போராட்டத்தில் வலியுறுத்தப்பட்டது. ‘அதிகாரிகளிடமும், அமைச்சர்களிடமும் தொடர்ந்து மனுக்கள் கொடுத்தும், எவ்வித பலனும் கிடைக்காததால், மறைந்த தலைவர்களின் சிலைகளிடம் மனு கொடுப்பதாக’ விவசாயிகள் வேதனை தெரிவித்தனர்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *