தமிழகத்தில் 16 மாநகராட்சிகள் எல்லை விரிவாக்கப்படும் என அரசு அறிவித்துள்ளது. அதன்படி திருச்சி மாநகராட்சியின் எல்லைக்கு அருகே உள்ள 22 ஊராட்சிகள் மாநகராட்சியுடன் இணைக்கப்படும் என அரசாணை வெளியிடப் பட்டுள்ளது. இதனால் பல்வேறு கிராம மக்கள் ஆங்காங்கே போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர். அந்த வகையில் அதவத்தூர், குமாரவயலூர் ஆகிய ஊராட்சிகளை மாநகராட்சியுடன் இணைக்க கூடாது என அந்த கிராம மக்கள் எதிர்ப்பு தெரிவித்து இன்று காலை திருச்சி அடுத்த சோமரசம்பேட்டையில் உள்ள ஸ்ரீரங்கம் எம்.எல்.ஏ. பழனியாண்டி வீட்டை முற்றுகையிட முயன்றனர்.
300 பெண்கள் உள்பட சுமார் 500க்கும் மேற்பட்டவர்கள் அங்கு வந்து திரண்டனர். தகவல் அறிந்ததும் சோமரசம்பேட்டை போலீசார் அங்கு வந்து பொதுமக்களை அப்புறப்படுத்த முயன்றனர். இதனால் அவர்கள் திருச்சி வயலூர் சாலையில் அமர்ந்து மறியலில் ஈடுபட்டனர். இதனால் தோகைமலையில் இருந்து திருச்சி மத்திய பேருந்து நிலையம் வரும் பேருந்துகள், திருச்சி – வயலூர் செல்லும் பேருந்துகள் என 20க்கும் மேற்பட்ட பேருந்துகள் மறியலில் சிக்கிக்கொண்டன. இதனால் வேலைக்கு செல்வோர், கல்வி நிலையங்களுக்கு செல்வோர் மறியலில் சிக்கி கொண்டு அவதிப்பட்டனர். இதனால் போக்குவரத்தை ஒழுங்குபடுத்த போலீசார் மறியல் செய்தவர்களில் சுமார் 300 பேரை கைது செய்தனர். சுமார் ஒன்றரை மணி நேரத்திற்கு பின்னர் போக்குவரத்து சீரானது.