சேலம் ஆத்தூர் பகுதியில் கடந்த அக்டோபர் 15ஆம் தேதி மாநில அளவிலான கபடி போட்டி நடந்தது இந்த போட்டியில் கன்னியாகுமரி மாவட்டத்தை சேர்ந்த கல்லூரி மாணவர்கள் கலந்துகொண்டு இரண்டாம் பரிசு பெற்று கோப்பையுடன் சேலத்தில் இருந்து திருச்சிக்கு பஸ்ஸில் வந்தனர் அதனைத்தொடர்ந்து திருச்சி ஜங்ஷன் ரயில் நிலையத்தில் இருந்து கன்னியாகுமரி மாவட்டத்திற்கு செல்வதற்காக வந்த வாலிபர்கள் இருவர் ரயில் நிலையம் உள்ளே மாஸ்க் அணியாமல் டிக்கெட் எடுக்க சென்றனர். அப்போது அங்கு பணியில் இருந்த டிக்கெட் பரிசோதகர் வாலிபர்களை அழைத்து மாஸ்க் அணியாமலும், பிளாட் பார்ம் டிக்கெட் எடுக்காமல் ஏன் வந்தீர்கள் என்று கேட்டு அபராத தொகையை செலுத்துங்கள் என்று கூறியுள்ளார். அதற்கு வாலிபர்கள் எங்களுக்கு டிக்கெட் ரயில் நிலையம் உள்ளே எடுக்க வேண்டும் என நினைத்து தெரியாமல் வந்து விட்டோம் மேலும் எங்களுடைய மாஸ் எங்களுடைய பேகில் வெளியில் இருக்கிறது உடனே அணிந்து கொள்கிறோம் எங்களுக்கு சிறு தயவு காட்டுங்கள் எங்களிடம் ஊருக்கு செல்ல வேண்டிய பணம் மட்டுமே இருக்கிறது வேறு பணமில்லை என கெஞ்சி கேட்டுள்ளனர். இதை ஏற்றுக்கொள்ளாத டிக்கெட் பரிசோதகர் விளையாட்டு வீரர்கள் என பாராமல் 1,600 ரூபாய் அபராதம் விதித்தார். அப்போது வாலிபர்கள் எங்களுக்கு சாப்பிடவும் வழி இல்லை, வெளியூர் செல்ல கையில் காசும் இல்லை என கூறி அழுதனர். விளையாட்டு வீரர்கள் எவ்வளவு கெஞ்சியும் அதனை கண்டுகொள்ளாமல் டிக்கெட் பரிசோதகர் அபராதம் விதித்தார். அப்போது அங்கு வேறொரு நிகழ்ச்சி தொடர்பாக செய்தி சேகரிக்க வந்த பத்திரிக்கையாளர்களிடம் விளையாட்டு வீரர்கள் தங்களுக்கு அபராதம் விதிக்கப்பட்டது குறித்து தெரிவித்தனர். இதுகுறித்து ரயில்வே டிக்கெட் பரிசோதகரிடம் பத்திரிகையாளர்கள் கல்லூரி மாணவர்களான விளையாட்டு வீரர்களுக்கு சிறிது இரக்கம் காட்டுங்கள் என கேட்டுக்கொண்டனர். அப்போது விளையாட்டு வீரர்களின் பரிதாப நிலைமையை புரிந்துகொண்ட ரயில்வே நிலைய மேலாளர் வாலிபர்களுக்கு அந்த அபராதத் தொகையை திருப்பி அளித்து உதவினார். மேலும் அவர்களிடம் கொரோனா நோய்த்தொற்று பரவக்கூடிய காலகட்டத்தில் உங்கள் நலம் உங்கள் வீட்டில் உள்ளவர்கள் நலம் மற்றும் உங்கள் அருகிலுள்ளவர்களின் நலன்கருதி மாஸ்க் அணிந்து செல்லுங்கள் என அறிவுரை கூறி அனுப்பி வைத்தார். டிக்கெட் பரிசோதகர் விளையாட்டு வீரர்களுக்கு அபராதம் விதித்த சம்பவம் ரயில் நிலையத்தில் சிறிது பரபரப்பை ஏற்படுத்தியது.