திருச்சி மாவட்டம் சோமரசம்பேட்டை மல்லியம்பத்து ஒன்றியத்தில் கடந்த சில தினங்களுக்கு முன்பு சிவக்குமார் என்ற ரியல் எஸ்டேட் அதிபர் கட்டையால் அடித்து படுகொலை செய்யப்பட்டார். சிவகுமாரின் மனைவி அளித்த புகாரின் பேரில். 4 பேர் மீது வழக்குப்பதிவு செய்து போலீசார் தீவிர விசாரணை நடத்தி வந்தனர். இந்நிலையில் பிரபாகரன் தீபக் ஆகியோரை மட்டும் போலீசார் கைது செய்துள்ளனர். மற்ற இருவரையும் கைது செய்யாததை கண்டித்து சிவா குமாரின் உடலை வாங்காமல் சாலை மறியலில் ஈடுபட்டனர்.
இந்நிலையில் இன்று காலை கலெக்டர் அலுவலகத்திற்கு வந்த உறவினர்கள். முக்கிய குற்றவாளிகளான முன்னாள் மல்லியம்பத்து ஊராட்சி மன்ற தலைவர் திமுகவை சேர்ந்த கதிர்வேல் மற்றும் ரியல் எஸ்டேட் தொழில் அதிபர் ரவி முருகையா உள்ளிட்டவர்களை கைது செய்ய வேண்டும் என்றும் அவர்கள் மீது எஸ்சி எஸ்டி வன்கொடுமை தடுப்பு சட்டத்தின்கீழ் வழக்குப்பதிவு செய்து நடவடிக்கை எடுக்க வேண்டும் என்ற கோரிக்கையை முன்வைத்து மல்லியம்பத்து ஒன்றியத்தை சேர்ந்த பொதுமக்கள் இறந்துபோன சிவகுமாரின் மனைவி மற்றும் உறவினர்கள் என சுமார் நூற்றுக்கும் மேற்பட்டவர்கள் மாவட்ட கலெக்டர் அலுவலக வளாகத்தில் தர்ணா போராட்டத்தில் ஈடுபட்டனர். போலீஸ் பேச்சுவார்த்தைக்குப் பிறகு கலெக்டர் அலுவலகம் முன்பு தொடர்ந்து போராட்டத்தில் ஈடுபட்டு வந்தனர்.
அதனைத் தொடர்ந்து போராட்டத்தில் ஈடுபட்டவர்களுடன் மாவட்ட கலெக்டர் சிவராசு பேசுகையில் குற்றம் செய்தவர்கள் மீது காவல்துறை உரிய நடவடிக்கைகளை எடுப்பார்கள் எனவே அரசு மருத்துவமனை பிரேதப் பரிசோதனை அறையில் வைக்கப்பட்டு இருக்கக்கூடிய சிவக்குமாரின் உடலை வாங்க வேண்டும் என்று அவர்களிடம் கேட்டபோது கதிர்வேல் மற்றும் ரவி முருகையா மீது வழக்கு பதிவு செய்தால் மட்டுமே சிவக்குமாரின் உடலை நாங்கள் வாங்குவோம் என்றும். தொடர்ந்து அவர்கள் மீது வழக்கு பதிவு செய்யும் வரை காத்திருப்புப் போராட்டத்தில் ஈடுபடுவோம் என்று தெரிவித்தனர். மேலும் இவர்களுக்கு ஆதரவாக தமிழக தேவேந்திர குல வேளாளர்கள் நல சங்கத்தினரும் போராட்டத்தில் ஈடுபட்டனர்.
அதனைத் தொடர்ந்து இன்று மாலை அகில இந்திய மக்கள் மறுமலர்ச்சி கழகம் தலைவர் பொன் முருகேசன், தேவேந்திரகுல வேளாளர் நல சங்க தலைவர் ராஜேந்திரன், மல்லியம்பத்து ஊராட்சி மன்ற தலைவர் விக்னேஸ்வரன், சிவகுமாரின் மனைவி மைதிலி மற்றும் உறவினர்கள் ஆகியோர் டிஐஜி இடம் முக்கிய குற்றவாளிகளை கைது செய்ய கோரி புகார் அளித்தனர். மேலும் நாளை உடலை வாங்குவதாக காவல்துறை அதிகாரியிடம் தெரிவித்துவிட்டு அங்கிருந்து கலைந்து சென்றனர்.