தமிழ்நாட்டில் கொரோனா பரவல் அதிகரித்து வருவதால் முழு ஊரடங்கை அறிவிக்க தேமுதிக தலைவர் விஜயகாந்த் கோரிக்கை விடுத்துள்ளார். இதுதொடர்பாக அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில், “நாளுக்கு நாள் அதிகரித்து வரும் கொரோனா பரவலைக் கட்டுப்படுத்துவது அவசியம். மருத்துவமனைகளில் சிகிச்சைக்குத் தேவையான உபகரணங்கள் இல்லை என வெளியாகும் தகவல்கள் வேதனையளிக்கின்றன.போதிய சிகிச்சையின்றி நாள்தோறும் பலர் உயிரிழந்து வருவது அதிர்ச்சியளிக்கிறது. இதைத் தடுக்க மத்திய, மாநில அரசுகள் போர்க்கால அடிப்படையில் நடவடிக்கை மேற்கொள்ள வேண்டும். ஆங்காங்கே முகாம்கள் அமைத்து, 18 வயதுக்கு மேற்பட்ட அனைவருக்கும் தடுப்பூசி போட நடவடிக்கை எடுக்க வேண்டும்.கொரோனாவைக் கட்டுப்படுத்த கடந்த ஆண்டு மார்ச் மாதம் ஊரடங்கு அமல்படுத்தப்பட்டதுபோல, இந்த ஆண்டும் முழு ஊரடங்கை அறிவித்து, போதிய நடவடிக்கைகளை மத்திய, மாநில அரசுகள் முன்னெடுக்க வேண்டும்.மேலும், ஒரு மாதத்துக்கு டாஸ்மாக் கடைகளை முழுவதுமாக அடைத்து வைப்பதே சிறந்த வழியாகும். தேர்தல் வாக்குப்பதிவின்போது கைவிரலில் மை வைப்பதுபோல, தடுப்பூசி செலுத்திக் கொண்டவர்களுக்கும் அடையாள மை வைத்தால், தடுப்பூசி போட்டுக் கொண்டவர்கள் யார் யார் என்று எளிதாக அடையாளம் காணமுடியும். இதன்மூலம் தடுப்பூசி போடாதவர்களை எளிதில் கண்டறிந்து, தடுப்பூசியை போட முடியும்” என்று குறிப்பிட்டுள்ளார். Facebook WhatsApp Email Messenger