தமிழகத்தில் உள்ள அனைத்து மருத்துவமனைகளிலும் மூன்று வேளையும் இலவச உணவு வழங்க நடவடிக்கை எடுக்கப்படும் என்று இந்து சமய அறநிலையத் துறை அமைச்சர் சேகர் பாபு தெரிவித்துள்ளார்.

கடந்த சில தினங்களுக்கு முன்பு நடந்த அமைச்சரவை கூட்டத்தில் மாவட்டங்களில் உள்ள அனைத்து மருத்துவமனைகளிலும் உள்ள வசதிகள், வழங்கப்படும் உணவு, சிகிச்சையையும் கண்காணிக்க வேண்டும் என அமைச்சர்களுக்கு உத்தரவிடப்பட்டது. மருத்துவமனையில் பணியாற்றும் முன்கள பணியாளர்களுக்கு தரமான உணவு வழங்கப்படுகிறதா? என்பதை அமைச்சர்கள் கண்காணிக்க வேண்டும் என்று அறிவுறுத்திய முதல்வர் மு.க.ஸ்டாலின் , கொரோனா தடுப்பு நடவடிக்கைகளை மேற்பார்வையிட மாவட்ட வாரியாக அமைச்சர்களை நியமனம் செய்தார்.
இந்நிலையில் சென்னை ராஜீவ்காந்தி மருத்துவமனையில் இலவச உணவு சேவையை தொடங்கி வைத்த அமைச்சர் சேகர் பாபு பின்னர் செய்தியாளர்களை சந்தித்தார். அப்போது பேசிய அவர், ” ஊரடங்கு நாட்களில் தனியார் அமைப்பு சார்பில் மூன்று வேளையும் இலவச உணவு வழங்கப்பட உள்ளது. தமிழகத்தில் உள்ள அனைத்து மருத்துவ மனைகளிலும் மூன்று வேளையும் இலவச உணவு வழங்க நடவடிக்கை எடுக்கப்படும்” என தெரிவித்தார்.