எஸ்டிபிஐ கட்சியின் மாநில செயற்குழு கூட்டம் மாநில தலைவர் நெல்லை முபாரக் தலைமையில் திருச்சியில் இன்று நடைபெற்றது. இந்த கூட்டத்தில் நகர்ப்புற உள்ளாட்சி தேர்தல் முடிவுகள் குறித்தும், கட்சி மேற்கொள்ள வேண்டிய அடுத்தகட்ட வளர்ச்சி திட்டங்கள் உள்ளிட்ட பல்வேறு விஷயங்கள் குறித்து மாநில நிர்வாகிகளுடன் விவாதிக்கப்பட்டது.
அதனைத் தொடர்ந்து நிருபர்களுக்கு பேட்டி அளிக்கையில் கூறியதாவது.
தமிழகத்தில் நடந்து முடிந்த நகர்ப்புற உள்ளாட்சி தேர்தலில் தனித்து களம் கண்ட எஸ் டி பி ஐ கட்சி 26 இடங்களில் வெற்றி பெற்றுள்ளது. அதில் கோவை மாநகராட்சியில் ஒரு வாடும், நகராட்சிகளில் 8 வார்டுகளிலும், பேரூராட்சிகளில் 17 வார்டுகளிலும் எஸ்டிபிஐ கட்சி வேட்பாளர்கள் வெற்றி பெற்றுள்ளனர். குறிப்பாக இந்த தேர்தலில் பண வினியோகம், பரிசுப் பொருட்கள் வினியோகம் போன்றவை வெளிப்படையாகவே நடந்தேறியுள்ளது. இதனை தடுத்து நிறுத்த மாநில தேர்தல் ஆணையம் எவ்வித அக்கறையும் காட்டவில்லை. தேர்தல் ஆணையம் ஆளும் கட்சியின் அணியாகவே செய்யப்பட்டுள்ளது. மேலும் பல்வேறு முறைகேடுகள் உடனே இந்த தேர்தல் நடைபெற்றுள்ளது. வருகிற மார்ச் 4ஆம் தேதி நடைபெற உள்ள மறைமுக மேயர், துணை மேயர், நகராட்சித் தலைவர் பேரூராட்சி தலைவர் பதவிகளுக்கு குதிரை பேரங்கள் ஆரம்பித்துவிட்டன. எனவே இந்த மறைமுக தேர்தல் ஜனநாயக முறைப்படி நடைபெற வேண்டும்.
உக்ரைனில் ரஷ்யா நிகழ்த்திவரும் போரை தடுத்து நிறுத்த ஒன்றிய அரசு முயற்சிகள் மேற்கொள்ள வேண்டும் மேலும் அங்கே இருக்கக்கூடிய இந்திய மாணவர்களை அழைத்து வரும் விமான நிறுவனங்கள் இலாபம் ஈட்டும் நோக்கத்துடன் அதிக கட்டணம் வசூலிப்பதை ஒன்றிய அரசு தடுத்து நிறுத்த வேண்டும். மேலும் அரசாங்கத்தின் சொந்த செலவில் மாணவர்களை மீட்டு வருவதற்கான ஏற்பாடுகளை ஒன்றிய மற்றும் மாநில அரசுகள் செய்ய வேண்டும். தமிழக மீனவர்கள் மீதான இலங்கை கடற்படையின் தாக்குதல் மற்றும் கைது நடவடிக்கைகள் அதிகரித்து வருகிறது. கடந்த ஒரு மாதத்தில் மட்டும் 80 தமிழக மீனவர்களை சிங்களக் கடற்படையால் கைது செய்யப்பட்டுள்ளனர். ஒன்றிய அரசு தமிழக மீனவர்களையும், விசைப் படகுகளையும் மீட்கும் நடவடிக்கை மேற்கொள்ள வேண்டும்.
கூடங்குளம் அணுக் கழிவுகளை அணுஉலை வளாகத்தில் பள்ளம் அமைத்து பாதுகாப்பாக வைக்க மத்திய அரசு அனுமதி வழங்கி டெண்டர் விடப்பட்டுள்ளது. அங்கு மக்கள் பயன்படுத்தும் குடிநீர் மற்றும் விவசாய நீரில் அணுக்கதிர்வீச்சு கலக்கும் வாய்ப்புகள் அதிகம் இருப்பதால் மக்கள் அச்சமடைந்து வருகின்றனர். ஆபத்து நிறைந்த அணுக்கழிவுகளை அணுமின் நிலைய வளாகத்திலேயே சேமிக்கும் திட்ட நடவடிக்கைகளை ஒருபோதும் தமிழக அரசு அனுமதிக்கக் கூடாது மேலும் தமிழக அரசு சட்ட ரீதியான நடவடிக்கை மேற்கொள்ள வேண்டுமென கேட்டுக் கொண்டார். இந்தக் கூட்டத்தில் கட்சியின் மாநில துணை தலைவர்கள் ரபீக் அகமது அப்துல் ஹமீது பொதுச் செயலாளர்கள் உமர்பாரூக் அகமது நவவி, நிஜாம் முகைதீன், பொருளாளர் அமிர்ஷா செயலாளர்கள் ரத்தினம், அபுபக்கர் சித்திக், நஜ்மா பேகம் மற்றும் திருச்சி மாவட்ட செயலாளர் மஜ்ஜித் ஆகியோர் கலந்து கொண்டனர்.