நாடு முழுவதும் கொரோனா வைரஸ் பாதிப்பு பன்மடங்கு அதிகரித்துள்ளது. பாதிப்பை கட்டுப்படுத்த மாநில அரசுகள் கொரோனா தடுப்பு நடவடிக்கையை தீவிரப்படுத்தியதன் விளைவாக, இன்று பாதிப்பு சற்று குறைந்துள்ளது. நேற்று முன்தினம் 4 லட்சத்திற்கு மேல் பதிவான பாதிப்பு இன்று 3.59 லட்சமாக பதிவானது சற்று ஆறுதல் அளித்தது.
தடுப்பு நடவடிக்கையை இன்னும் தீவிரப்படுத்தினால் பாதிப்பை முற்றிலுமாக கட்டுக்குள் கொண்டுவர முடியும் என சுகாதாரத் துறை தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது. நாடு முழுவதும் முழு ஊரடங்கு அமல் படுத்துவது தான் இதற்கு ஒரே தீர்வு என காங்கிரஸ் முன்னாள் தலைவர் ராகுல் காந்தி மத்திய அரசுக்கு பரிந்துரைத்துள்ளார். இதனிடையே டெல்லி, கர்நாடகா, பீகார் உள்ளிட்ட மாநிலங்கள் முழு ஊரடங்கை அமல் படுத்தின.இந்த நிலையில், வரும் 15ம் தேதி வரை பீகாரில் முழு ஊரடங்கை நீடிப்பதாக அம்மாநில முதல்வர் நிதிஷ்குமார் அறிவித்துள்ளார். கொரோனா பாதிப்பை கட்டுப்படுத்தும் நோக்கில் ஊரடங்கு நீட்டிக்கப்படுவதாகவும் ஊரடங்கு நாட்களில் கடைபிடிக்க வேண்டிய வழிகாட்டு நெறிமுறைகள் விரைவில் அறிவிக்கப்படும் என்றும் அவர் தெரிவித்துள்ளார். பீகாரில் இதுவரை கொரோனாவால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 5.09 லட்சமாக உயர்ந்துள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.