எஸ்.ஆர்.எம்.யூ ரயில்வே தொழிற்சங்கத்தை சேர்ந்த தொடர்வண்டி மேலாளர்கள் மாநாடு திருச்சியில் நடைபெற்றது. இதில் எஸ்.ஆர்.எம்.யூ தலைவர் ராஜா ஸ்ரீதர், துணை பொதுச்செயலாளர் வீரசேகரன் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர். மாநாட்டிற்கு முன்னதாக செய்தியாளர்களிடம் பேசிய ராஜா ஸ்ரீதர்,
ரயில்வே துறையை தனியார்மயமாக்கும் முயற்சியில் ஒன்றிய அரசு ஈடுபட்டு வருகிறது. ரயில்வே தனியார்மயமாக்கப்பட்டால் ரயில்வே தொழிலாளர்கள் வேலை வாய்ப்பு குறைக்கப்பட்டு அவர்கள் வாழ்வாதாரம் பாதிக்கும். ஏழை, எளிய பொதுமக்களுக்கும் இது கடுமையான பாதிப்பை ஏற்படுத்தும். புதிய ஓய்வூதிய திட்டம் ஓய்வூதியம் இல்லாத திட்டமாக இருக்கிறது.ஒன்றிய அரசு ஊழியர்களுக்கு சமூக பாதுகாப்பு இல்லாத நிலையை ஒன்றிய அரசு உருவாக்குகிறது. எனவே தனியார் மயத்தால் ஏற்படும் பாதிப்புகள் குறித்தும், புதிய ஓய்வூதிய திட்ட பாதிப்புகள் குறித்தும் ரயில்வே ஊழியர்களிடம் விழிப்புணர்வை ஏற்படுத்தி அவர்களை ஒன்றுதிரட்ட எஸ்.ஆர்.எம்.யூ முயற்சித்து வருகிறது. அதற்காக தொடர் பிரச்சாரத்தில் ஈடுபட்டு வருகிறோம். பிரச்சாரத்திற்கு இறுதியில் போராட்ட அறிவிப்பை வெளியிடுவோம்.
பிரதமரும், ரயில்வே அமைச்சரும் ரயில்வே தனியார் மயமாக்கப்படாது என்கிற பொய்யை தொடர்ந்து கட்டமைத்து வருகிறார்கள்.இன்று அரசிடம் விமானத்துறை இருக்கிறது ஆனால் விமானங்கள் அரசிடம் இல்லை அது தனியாரிடம் இருக்கிறது. அது போலவே ரயில்களையும் தனியாரிடம் விற்க முயற்சிக்கிறார்கள். அரசிடம் நிதி ஆதாரம் இல்லை என ஒன்றிய அரசு கூறுவது மோசடியான வாதம். கார்ப்பரேட்டுகளுக்கும் பெரு முதலாளிகளுக்கும் நிதி கொடுக்க அரசிடம் பணம் இருக்கிறது ஆனால் ஏழை எளிய மக்களுக்கு நிதி கொடுக்க பணம் இல்லை என கூறுவது மோசடியானது.
மின்சார மசோதாவை ஒன்றிய அரசு இன்று தாக்கல் செய்ய இருக்கிறார்கள்.இதனால் இலவச மின்சார பெறும் எளிய மக்கள், விவசாயிகள், விசைத்தறி தொழிலாளர்கள் பாதிக்கப்படுவார்கள். இது மின்சார துறையை தனியார் மயமாக்குவதற்கான முதல் கட்ட முயற்சி. இது போல ஒவ்வொரு துறையும் அவர்கள் தனியார்மயமாக்கி இறுதியில் ரயில்வே துறையையும் கைவைக்க பார்க்கிறார்கள். அதனை எதிர்த்து ரயில்வே ஊழியர்கள் கடுமையாக போராடி அதில் வெற்றி பெறுவோம்.
மாநில அரசு பழைய ஓய்வூதிய திட்டத்தை செயல்படுத்த நடவடிக்கை எடுத்தாலும் அதற்கு ஒன்றிய அரசு ஒப்புதல் அளிக்க மறுக்கிறார்கள். ராஜஸ்தான் மாநிலத்தில் பழைய ஓய்வூதிய திட்டத்தை செயல்படுத்த சட்டமன்றத்தில் தீர்மானம் நிறைவேற்றி உள்ளார்கள். ஆனால் அந்த மாநிலத்திற்கு ஒன்றிய அரசிடமிருந்து தர வேண்டிய நிதியை ஒன்றிய அரசு தர மறுக்கிறார்கள் அதனால் தான் அவர்களால் பழைய ஓய்வூதிய திட்டத்தை செயல்படுத்த முடியவில்லை. மாநில அரசுகள் பழைய ஓய்வூதிய திட்டத்தை செயல்படுத்த நினைத்தாலும் ஒன்றிய அரசு அதற்கு ஒப்புக்கொள்ள மறுக்கிறார்கள். ரயில்வே தேர்வுகளுக்கு பயிற்சி அளிக்கும் வகையில் வட மாநிலங்களில் அதிக பயிற்சி மையங்கள் திறக்கப்பட்டு ஏராளமானோர் பயிற்சி பெறுகிறார்கள். அதே போல அவர்கள் அவர்களின் தாய் மொழியில் தேர்வெழுத வாய்ப்பு அவர்கழுக்கு உள்ளது அதன் காரணமாகவே ரயில்வே துறையில் அதிகமான வட மாநிலத்தவர் பணியில் இணைகிறார்கள் என்றார்.