தமிழக நகராட்சி நிர்வாகத்துறை அமைச்சர் கே.நேருவின் சகோதரர் ராமஜெயம் கொலை வழக்கு தொடர்பாக சிறப்பு புலனாய்வு குழு விசாரணை செய்து வரும் நிலையில் இன்று உண்மை கண்டறியும் சோதனை நடத்துவதற்காக சந்தேகத்திற்கு இடமான 12 நபர்களுக்கு திருச்சி நீதிமன்றத்தில் ஆஜராக சம்மன் அனுப்பப்பட்டது.
இதன் அடிப்படையில் மோகன்ராம்,தினேஷ் ,நரைமுடி கணேசன்,சத்யராஜ், கலைவாணன், மாரிமுத்து,தீலீப் என்கிற லட்சுமி நாராயணன்,ராஜ்குமார்,சுரேந்தர், சண்முகம் ,சிவ குணசேகரன் ஆகியோர் நீதிபதி சிவக்குமார் முன்னிலையில் இன்று ஆஜராகினர். இந்த வழக்கை வரும் 7 ஆம் தேதிக்கு ஒத்திவைத்து நீதிபதி உத்தரவிட்டார்.
இதனை தொடர்ந்து 12 பேரில் ஒருவரான மோகன் ராம் வழக்கறிஞர் அலெக்ஸ் செய்தியாளர்களை சந்தித்து பேசிய போது :
நீதிமன்ற அனுமதியை எஸ்.பி ஜெயக்குமார் தான் கோர முடியும் என உயர்நீதிமன்றம் தெளிவுப்படுத்தி உள்ள நிலையில் அதற்கு மாறாக ராமஜெயம் கொலை வழக்கில் சிறப்பு புலனாய்வு குழுவின் டி.எஸ்.பி தான் அனுமதி வேண்டி மனு தாக்கல் செய்துள்ளார். இது உயர்நீதிமன்ற வழிக்காட்டுதலுக்கு எதிரானது – எனவே இது தொடர்பாக சிறப்பு புலனாய்வு குழுவின் எஸ்.பி மீண்டும் மனு தாக்கல் செய்ய வேண்டும் வரும் 7 ஆம் தேதி மீண்டும் அனைவரும் ஆஜராக வேண்டும் என நீதிபதி உத்தரவிட்டுள்ளார்.ராமஜெயம் கொலை வழக்கு தொடர்பாக ஏன் அவர்கள் குடும்பத்தினரிடம் விசாரணை மேற்கொள்ளவில்லை என கேள்வி எழுப்பிய வழக்கறிஞர், ராமஜெயம் மது அருந்தும் பழக்கமில்லை என குடும்பத்தார் கூறியுள்ளனர் – ஆனால் அவருக்கு மது அருந்தும் பழக்கமுள்ளது என சி.பி.ஐ விசாரணை அறிக்கையில் தெளிவுப்படுத்தப்பட்டுள்ளது. எனவே முதலில் அவர் குடும்பத்தினரிடம் மீண்டும் விசாரணை நடத்த வேண்டும் மேலும் அரசியல் காரணங்களுக்காகவே 12 பேரை மட்டும் அழைத்துள்ளனர் என்றார்.