தமிழக முதல்வர் காவிரி டெல்டா மாவட்டங்களில் தூர்வாரும் திட்டத்தின் கீழ் பாசன அமைப்புகள், ஆதாரங்களை தூர்வார திருச்சி மண்டலத்தில் 636 பணிகளை 4004.83 கி.மீ நீளம் வரை மேற்கொள்ள ரூ.80.00 கோடி நிர்வாக ஒப்புதல் மற்றும் நிதி ஒதுக்கீடு வழங்கி ஆணையிட்டார். திருச்சி மாவட்டத்தில் 100 பணிகளை 375.78 கி.மீ நீளம் வரை மேற்கொள்ள ரூ.15.88 கோடிக்கு நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது. மேட்டூர் அணையிலிருந்து டெல்டா பாசன வசதிக்காக திறந்து விடப்படும் தண்ணீர் விரயமாகாமல் கடைமடை வரை தங்கு தடையின்றி சென்று சேரும் வகையில், டெல்டா பாசனப்பகுதிகளில் நீர் நிலைகளை தூர்வாரி சீரமைக்கும் பணிகளை விரைந்து முடிக்க திட்டமிடப் பட்டுள்ளது. குறித்த காலத்தில் தரமான முறையில் பணிகளை முடிக்க ஏதுவாக திருச்சி மாவட்டத்திற்கு ஒரு மூத்த இந்திய ஆட்சிப்பணி கண்காணிப்பு அலுவலராக நியமிக்கப்பட்டுள்ளார்.
இப்பணிகள் தொடர்பாக உழவர் குழுக்கள் உருவாக்கப்பட்டு அக்குழுக்களின் ஆலோசனைகள் பெறப்பட்டு வெளிப்படைத் தன்மையுடன் பணிகள் நடைபெறுவதை தெரிவிக்கும் வகையில் அனைத்து தகவல்களும் அறிவிப்பு பலகைகளில் பொதுமக்களின் பார்வைக்கு வைக்கப்படும் என்றும் அறிவிக்கப்பட்டது.மேட்டூர் அணையிலிருந்து தண்ணீர் திறப்பதற்கு முன்பாக 116 மண் அள்ளும் இயந்திரங்களை கொண்டு விரைந்து முடிக்க திட்டமிடப் பட்டுள்ளது. தூர்வாரும் பணிகளின் முன்னேற்றத்தை கண்காணிப்பதற்கு TNWRIMS செயலி புதியதாக உருவாக்கப்பட்டு தற்பொழுது பயன்பாட்டில் உள்ளது. அதன் ஒருபகுதியாக திருச்சி பஞ்சப்பூர் அருகில் உள்ள கே.சாத்தனூர் கிராமம் கோரையாற்றில் நகராட்சி நிருவாகத் துறை அமைச்சர் கே.என்.நேரு இன்று நீர்வளத்துறையின் சார்பில் சிறப்பு தூர் வாரும் பணிகளை தொடங்கி வைத்தார்.
பின்னர் செய்திளாளர்களை சந்தித்து பேசிய அமைச்சர் கே.என்.நேரு:-
திருச்சி மாவட்டத்தில் 100 பணிகளை 375.78 கி.மீ நீளம் வரை மேற்கொள்ள ரூ.15.88 கோடிக்கு நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது. அதில் முதல்கட்டமாக 21.5லட்சம் மதிப்பில் 3கிமீ வாய்க்கால்கள் அனைத்தும் தூர்வாரப்படும் பணிகள் இன்று தொடங்கி வைக்கப்பட்டுள்ளது. மேட்டூரில் இருந்து தண்ணீர் திறப்பதற்கு 2மாதத்திற்கு முன்பே பணிகள் தொடங்கப்பட்டுள்ளது இந்த பணிகள் விரைந்து முடிக்கப்படும் என்றார். இந்நிகழ்ச்சியில் மாவட்ட ஆட்சித் தலைவர் பிரதீப் குமார், மாநகராட்சி மேயர் அன்பழகன், மாநகராட்சி ஆணையர் வைத்திநாதன், சட்டமன்ற உறுப்பினர்கள் பழனியாண்டி, சௌந்தர பாண்டியன்,ஸ்டாலின் குமார், நீர்வளத்துறை தலைமை பொறியாளர் ராமமூர்த்தி, நகர பொறியாளர் சிவபாதம் உள்ளிட்ட அரசு அலுவலர்கள் மண்டல தலைவர்கள், மாமன்ற உறுப்பினர்கள் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.