திருச்சி உறையூர் பகுதியை சேர்ந்தவர் காமராஜர் – ராஜலட்சுமி தம்பதி இவரது மகள் சினேகா (25) பட்டதாரி ஆவார். இவர் புள்ளம்பாடி பகுதியை சேர்ந்த அறிவழகன் – சகாயராணி தம்பதியின் மகன் விஜயகுமார் (30) தனியார் வங்கியில் வேலை பார்த்து வருகிறார். விஜயகுமார் மற்றும் சினேகா இருவரும் வெவ்வேறு சமூகத்தை சேர்ந்த இவர்கள் காதலித்து இரு வீட்டார் சம்மதத்துடன் கடந்த 8 மாதத்திற்கு முன்பு திருமணம் செய்துகொண்டனர்.
திருமணத்தின் போது பெண் வீட்டார் 18 பவுன் நகையும் ஒரு லட்சம் மதிப்புள்ள சீர்வரிசை பொருட்களை வழங்கினர். இந்நிலையில் விஜயகுமார் மற்றும் சினேகா தம்பதியினர் திருச்சி பெரிய கடை வீதியில் உள்ள வரதராஜ பெருமாள் கோவில் தெருவில் இருவரும் வசித்து வந்தனர். கடந்த சில மாதங்களாக விஜயகுமார் தனது மனைவி சினேகாவிடம் வரதட்சிணை நகை குறைவாக உள்ளதாகவும் புதியதாக தொழில் தொடங்குவதற்காக நகையும் பணமும் கேட்டு அடிக்கடி வாக்குவாதத்தில் ஈடுபட்டதாக கூறப்படுகிறது.
மேலும் விஜயகுமாரின் தாயும் திருமணத்தை ஏற்றுக் கொள்ளாமல் தொடர்ந்து வேறு ஒரு திருமணத்தை தனது மகனுக்கு செய்து வைக்க முடிவு செய்ததாகவும் தெரிவித்ததாக கூறப்படுகிறது. இந்நிலையில் இன்று காலை கணவர் விஜயகுமார் மனைவி சினேகாவிடம் வீடியோ கால் மூலம் பேசி மீண்டும் நகை கேட்டுள்ளார் இதனால் மன உளைச்சலில் இருந்த சினேகா இன்று காலை வீட்டில் உள்ள மின்விசிறியில் தூக்குப்போட்டு தற்கொலை செய்து கொண்டார். தகவலறிந்த கோட்டை அனைத்து மகளிர் காவல் நிலைய காவல் துறையினர் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்து உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்காக திருச்சி அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். மேலும் சம்பவம் குறித்து வழக்கு பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். இளம்பெண் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்ட சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.