தமிழக ஏரி மற்றும் ஆற்றுப் பாசன விவசாயிகள் சங்கத்தின் மாநில பொதுக்குழு கூட்டம் திருச்சி சத்திரம் பேருந்து நிலையம் அருகே உள்ள தனியார் விடுதியில் இன்று நடைபெற்றது. தலைவர் பூரா. விஸ்வநாதன் தலைமையில் நடைபெற்ற இந்த கூட்டத்தில் விவசாயிகள் ஏராளமானோர் கலந்து கொண்டனர். தொடர்ந்து தலைவர் பூரா. விஸ்வநாதன் செய்தியாளர்களை சந்தித்து பேசினார் ,

அதில் திருவண்ணாமலையில் சிப்காட்டுக்கு நிலம் எடுப்பதை கண்டித்து போராட்டம் நடத்திய விவசாயிகள் மீது குண்டர் சட்டத்தில் வழக்கு பதிவு செய்தது கண்டனத்துக்குரியது. தேசிய மயமாக்கப்பட்ட வங்கிகளில் விவசாயிகள் வாங்கிய கடனை தள்ளுபடி செய்ய வேண்டும். காவிரி டெல்டா பகுதியில் தண்ணீர் இல்லாமல் சம்பா சாகுபடி பொய்த்து விட்டது. அதனால் ஏக்கருக்கு 40 ஆயிரம் ரூபாய் இழப்பீடு வழங்க வேண்டும். காவிரி டெல்டா பகுதியில் மீத்தேன் ஷேல் கேஸ் ஆகியன எடுப்பதற்கு அனுமதிக்க கூடாது. காவிரி கொள்ளிடம் ஆறுகளில் 30 அடி ஆழத்திற்கு மேல் மணல் எடுக்கப்பட்டதால் நிலத்தடி நீர்மட்டம் வெகுவாக குறைந்துவிட்டது. அதனால் கரூர், திருச்சி, தஞ்சாவூர், அரியலூர், பெரம்பலூர் மாவட்டங்களில் ஆறுகளில் மணல் எடுப்பதற்கு அனுமதி வழங்கக் கூடாது.

தமிழகத்தில் ஒரு லட்சம் ஏக்கருக்கு மேல் முந்திரி சாகுபடி செய்யப்படுகிறது. அதற்கு பயிர் காப்பீடு வழங்க வேண்டும். மக்காச்சோளம் சாகுபடி செய்த விவசாயிகள், புழு தாக்குதலால் வெகுவாக பாதிக்கப்பட்டுள்ளனர். அதனால் கடனில் தத்தளிக்கும் விவசாயிகளுக்கு ஏக்கருக்கு 40 ஆயிரம் நஷ்ட ஈடு வழங்க வேண்டும் என தெரிவித்தார். மேலும் கரும்பு, நெல், நிலக்கடலை போன்றவற்றுக்கு கட்டுப்படியான விலை வழங்க வேண்டும். பால் உற்பத்தியாளர்களுக்கு 50% மானிய விலையில் தீவனம் வழங்க வேண்டும். தமிழக அரசு கொண்டு வந்துள்ள நில ஒருங்கிணைப்பு சட்டம் விவசாயிகளுக்கு பாதிப்பை ஏற்படுத்தும்.

எனவே தமிழக அரசு அந்த சட்டத்தை வாபஸ் பெறுவதோடு, குண்டர் சட்டத்தில் கைது செய்யப்பட்ட விவசாயிகளையும் உடனடியாக விடுவிக்க வேண்டும் உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி சென்னை வள்ளுவர் கோட்டத்தில் வரும் 21 ஆம் தேதி தமிழக ஏரி மற்றும் ஆற்றுப் பாசன விவசாயிகள் சங்கம் சார்பில் போராட்டம் நடத்தப்படும். அதிமுகவும் திமுகவும் விவசாயிகள் ஓட்டுக்களை பெறுவதற்காக போட்டி போட்டுக் கொண்டு பல திட்டங்களை அறிவித்தனர். அதன்பின் விவசாயிகள் போராட்டத்திற்கு அனுமதி மறுப்பதோடு விவசாயிகளுக்கான திட்டங்களை காலம் தாழ்த்தி அறிவித்து பயன்பெற முடியாமல் செய்து விடுகின்றனர் என தெரிவித்தார்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

தற்போதைய செய்திகள்