2024 ஆம் ஆண்டு தேர்தல் நிலைப்பாடு தொடர்பாக மக்கள் அதிகாரம் பொதுச் செயலாளர் வழக்கறிஞர் ராஜு திருச்சியில் செய்தியாளர்களை சந்தித்து பேசினர் அதில்,
பாஜக இந்தியாவில் தங்களுடைய பாசிச கொள்கைகளை தொடர்ந்து செயல்படுத்தி வருகின்றனர். 2024 ஆம் ஆண்டு தேர்தலில் அவர்களை தோல்வியடைய செய்ய வேண்டியது மிகவும் அவசியமாக இருக்கிறது. இந்த சூழலில் தான் தேர்தலுக்கு எதிராக செயல்பட்ட மக்கள் அதிகாரம், ம.க.இ.க மற்றும் அதன் துணை அமைப்புகள் தற்பொழுது தேர்தல் பிரச்சாரத்தில் ஈடுபட முடிவு செய்துள்ளோம். அதன்படி பாஜகவை வீழ்த்துவதற்கு அதற்கு நேர் எதிர் அணியில் இருக்கும் இந்திய கூட்டணிக்கு ஆதரவு தெரிவிப்பது என முடிவு செய்துள்ளோம். அவர்களுக்கு ஆதரவாக அனைத்து பிரச்சாரங்களிலும் நாங்கள் ஈடுபட உள்ளோம். 2024 ஆம் ஆண்டு ஜனவரி மாதம் 7 ஆம் தேதி திருச்சியில் இந்தியா கூட்டணிக்கு ஆதரவாக பேரணி மற்றும் பொதுக்கூட்டம் நடத்த உள்ளோம். அதில் ஒத்த சிந்தனை உடையவர்களை அழைக்க இருக்கிறோம்.
தங்களுடைய அசுர பலத்தை பயன்படுத்தி அனைத்து அரசு இயந்திரங்களையும் பாஜக தனக்காக பயன்படுத்தி வருகிறது. குறிப்பாக சிபிஐ, அமலாக்கத்துறை உள்ளிட்டவற்றை தங்களுக்காக பயன்படுத்தி வருகிறது. அரசியல் அமைப்பு சட்டத்திற்கு எதிராக செயல்பட்டு வருகிறார்கள். இந்த சூழலில் அவர்களை வீழ்த்த வேண்டியது கட்டாயமாக உள்ளது. எனவே தான் கடந்த காலங்களில் தேர்தலுக்கு எதிராக செயல்பட்டு வந்த நாங்கள் வரும் நாடாளுமன்ற தேர்தலில் இந்தியா கூட்டணிக்கு ஆதரவாக பிரச்சாரம் செய்ய இருக்கிறோம். அது மட்டுமல்லாமல் முதன்முறையாக எங்களுடைய அமைப்பை சேர்ந்தவர்களும் தேர்தலில் வாக்களிக்க இருக்கிறார்கள். நாங்கள் இந்த முறை தேர்தல் பிரச்சாரத்தில் மட்டுமே ஈடுபட உள்ளோம், தேர்தலில் போட்டியிடப் போவதில்லை பாஜகவை வீழ்த்த தற்பொழுது ஒரு பலமான அணிதான் தேவைப்படுகிறது. அந்த வகையில் இந்தியா கூட்டணி அவர்களுக்கு எதிராக பலமாக இருக்கிறார்கள். நாங்கள் அவர்களுக்கு எதிராக பலமாக வரும் காலகட்டத்தில் பாஜகவை எதிர்த்து தேர்தலிலும் போட்டியிடுவோம்.
பாஜக கூட்டணியிலிருந்து அதிமுக வெளியேறியதை ஒரு நாடகமாகவே பார்க்கிறோம். அதிமுகவால் பாஜக விடமிருந்து ஒருபோதும் முழுமையாக வெளியேற முடியாது தற்பொழுது சிறுபான்மை மக்களின் வாக்குகளை பெற அவர்கள் கூட்டணியில் இருந்து பிரிந்தது போல் ஒரு நாடகம் நடத்துகிறார்கள் அதை மக்கள் நம்ப மாட்டார்கள். வரும் தேர்தலில் திண்ணை பிரச்சாரம், கலைப்பிரச்சாரம் என பலவகை பிரச்சாரங்கள் செய்து இந்தியா கூட்டணியை வெற்றி பெற செய்வோம். வட இந்தியாவில் உள்ள எங்கள் கொள்கை கொண்ட வெவ்வேறு அமைப்புகளிடமும் இந்தியா கூட்டணிக்கு ஆதரவு தெரிவிக்க வேண்டும் என பேச்சுவார்த்தை நடத்தி வருகிறோம். இந்த செய்தியாளர் சந்திப்பின் போது என்கிற BJP தோற்கடிப்போம்,INDIA வை ஆதரிப்போம் என்ற இலட்சினையை அந்த அமைப்பினர் வெளியிட்டனர். இந்த பத்திரிகையாளர் சந்திப்பின் போது பொருளாளர் காளியப்பன், இணை செயலாளர் செழியன், துணை செயலாளர் மருது, மக்கள் கலை இலக்கிய கழக பொதுச் செயலாளர் கோவன், புதிய ஜனநாயக தொழிலாளர் முன்னணி பொது செயலாளர் லோகநாதன், புரட்சிகர மாணவர் இளைஞர் முன்னணி பொது செயலாளர் அன்பு ஆகியோர் உடன் இருந்தனர்.