திருச்சி, மண்ணச்சநல்லூர், மேலசீதேவிமங்கலம் கிராமத்தில், ஐந்து தலைமுறைகளாக, இந்தியா சுதந்திரம் பெறுவதற்கு முன்பிலிருந்து குடியிருந்து வரும், பூர்வ குடிகளாகிய கிராம மக்களுக்கு, பட்டா வழங்க கோரி திருச்சி மாவட்ட ஆட்சியரிடம் கிராம மக்கள் மனு அளித்துள்ளனர். மேலும் இந்த இடத்தில், மண்ணச்சநல்லூர் சார்பதிவாளர் அலுவலகத்தின் பெயரிலும், பிற்படுத்தப்பட்டோர் நல மாணவர்கள் விடுதிக்கும் பட்டா பதிவாகியுள்ளது. ஆனால், அங்கு பல ஆண்டுகளாக பூர்வீகமாக வீடு கட்டி குடியிருப்பவர்களுக்கும், கிரையபத்திரம் மூலம் மனை/வீடு கிரயம் பெற்று அனுபவம் செய்து வருபவர்களுக்கும் பட்டா வழங்கப்படாமல் உள்ளது. பூர்விகமாக குடியிருப்பு நத்தமாக இருந்ததை, அரசு புறம்போக்கு என திருத்தம் செய்ததால் அங்கு குடியிருக்கும் மக்களுக்கு பட்ட வழங்க வழிவகை இல்லாமல் இருந்தது.

இதனால், அருணாச்சலம் என்பவர் சென்னை உயர்நீதிமன்ற மதுரை கிளையில் வழக்கு தொடுத்ததன் காரணமாக, கடந்த 2022 ஆம் ஆண்டு ஜூன் மாதம் 24 ஆம் தேதி நீதிமன்ற உத்தரவுப்படி, மேலசீதேவிமங்கல கிராமத்தில் வீடு கட்டி குடியிருந்து வருபவர்களுக்கு மேற்படி நத்தம் இடத்தை, நத்தம் நிலவரித் திட்டத்தில் சேர்த்து பட்டா வழங்க வருவாய் கோட்டாட்சிதலைவர் வழி அரசுக்கு பரிந்துரை செய்யப்பட்டது. ஆனால், அதன் பிறகு இன்று வரை குடியிருப்பு வாசிகளுக்கு பட்டா வழங்கப்படவில்லை. எனவே பூர்வீகமாக குடியிருந்து வரும் கிராம மக்களுக்கு உட்பிரிவு செய்து நத்தம் பட்டா கிடைக்க காலம் தாழ்த்தாமல் விரைந்து ஆவண செய்யுமாறு மனு அளித்துள்ளனர்.

இது குறித்து.. புதியபாதை மக்கள் இயக்க மாநில ஒருங்கிணைப்பாளர் மண்ணை குமார் கூறும் போது… எங்களுக்கு பட்டா வழங்க நடவடிக்கை எடுப்பதாக, திருச்சி மண்ணச்சநல்லூர் தொகுதி திமுக சட்டமன்ற உறுப்பினர் கதிரவன் தனது தேர்தல் வாக்குறுதியில் தெரிவித்து இருந்தார். அவர் சட்டமன்ற உறுப்பினராக பொறுப்பேற்ற பிறகு கடந்த சில ஆண்டுகளாக தொடர்ந்து அவரை சந்தித்து மனு அளித்த போது… பட்டா கையெழுத்து ஆகிவிட்டது உங்களுக்கு கூடிய விரைவில் கிடைக்கும் என கூறி ஏமாற்றி வந்ததாகவும், இதன் தொடர்ச்சியாக, வார்டு மெம்பர் தேர்தலின் போது, திமுகவினரை வெற்றி பெறச் செய்யுங்கள் உங்களுக்கு பட்டா பெற்று தருகிறேன் எனக் கூறினார். தேர்தலில் வெற்றி பெற்றும், இதுநாள் வரை பட்டா வழங்கப்படவில்லை என வேதனையுடன் தெரிவித்தார்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

தற்போதைய செய்திகள்