திருச்சி காஜா பேட்டை மேலகிருஷ்ணன் கோவில் தெருவை சேர்ந்தவர் செல்லையா வயது 36 மனைவி மற்றும் இரண்டு குழந்தைகளுடன் வசித்து வருகிறார். மேலும் கட்டடங்களுக்கு கரையான் மருந்து அடிக்கும் தொழில் செய்து வருகிறார். இந்நிலையில் வழக்கம்போல் தனது பணி முடிந்து இரவு காஜா பேட்டை பகுதியில் உள்ள தனது வீட்டிற்கு இருசக்கர வாகனத்தில் வந்து கொண்டிருந்த பொழுது திடீரென ஒரு வாலிபர் செல்லையாவை வழி மறித்து அவரை தாக்கி அவர் கழுத்தில் அணிந்திருந்த 2 பவுன் தங்க செயினை பறித்துக் கொண்டு தப்ப முயன்றார். உடனடியாக சுதாரித்துக் கொண்ட செல்லையா செயினை ஒரு கையால் பிடித்துக் கொண்டு அந்த வாலிபரிடம் இருந்து தப்பிக்க முயன்று போராடினார்.
அப்போது மேலும் அங்கு இருட்டில் மறைந்து இருந்த மூன்று வாலிபர்கள் திடீரென ஓடிவந்து செல்லையாவின் முகம், மார்பு மற்றும் கைகளில் பயங்கர ஆயுதங்களால் தாக்கினார். செல்லையாவின் அலறல் சத்தம் கேட்டு அருகில் இருந்த பொதுமக்கள் ஓடி வந்தனர். இதை பார்த்த அந்த நான்கு வாலிபர்களும் செயினை பறித்துக் கொண்டு செல்லையாவை கீழே தள்ளி விட்டு அங்கிருந்து கண்ணிமைக்கும் நேரத்தில் ஓடி மறைந்தனர். மேலும் தாக்கப்பட்டதில் மயங்கி விழுந்து கிடந்த செல்லையாவை அங்கிருந்த பொதுமக்கள் உடனடியாக மீட்டு திருச்சி அரசு மருத்துவமனையில் சிகிச்சைக்காக சேர்த்தனர். மேலும் இது குறித்து திருச்சி பாலக்கரை காவல் நிலையத்திற்கு தகவல் தெரிவிக்கப்பட்டது சாம்பவ இடம் வந்த போலீசார் அப்பகுதி பொதுமக்களிடம் விசாரணை மேற்கொண்டனர்.
விசாரணையில் அதே பகுதியை சேர்ந்த வாலிபர்கள் என தெரியவந்தது. மேலும் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வரும் செல்லையா அளித்த புகாரின் அடிப்படையில் அதே பகுதியை சேர்ந்த ஆனஸ்ட்ராஜ் வயது 32, ஸ்டீபன் வயது 25, மணிகண்டன் வயது 23 இவர்கள் 3 பேரை போலீசார் பிடித்து வழக்கு பதிந்து விசாரணை நடத்தி வருகின்றனர். மேலும் 1 1/4 பவுன் தங்க செயினை பறித்துக் கொண்டு தலைமறைவான நவீன் வயது 30 என்ற வாலிபரை பாலக்கரை போலீசார் வலைவீசி தேடி வருகின்றனர். வழிப்பறியில் ஈடுபட்ட நவீன் மீது ஏற்கனவே காவல் நிலையத்தில் வழக்குகள் நிலுவையில் உள்ளது குறிப்பிடத்தக்கது.