திருச்சி நெ.1 டோல்கேட் ஒய் ரோடு அருகே கஞ்சா போதையில் மோட்டார் சைக்கிளில் வந்த நபர் ஒருவர் எதிரே வந்த மோட்டார் சைக்கிள்கள் மீது அடுத்தடுத்து மோதி விபத்தை ஏற்படுத்தியுள்ளார். இதனை தட்டிக்கேட்ட வாகன ஓட்டிகளிடம் அவர் கத்தியை காட்டி மிரட்டி ரகலையில் ஈடுபட்டுள்ளார். இதுகுறித்து கொள்ளிடம் போலீசாருக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. அதன்பேரில் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்த போலீசார் கஞ்சா போதையில் இருந்த நபரிடம் விசாரணை நடத்தினர்.
அப்போது அந்த போதை ஆசாமி போலீசாரிடம் நான் ஒரு அரசியல் பிரமுகரின் மனைவியின் கார் டிரைவர் என சொல்லி நீ யார் என்னை கேட்பதற்கு என்று கூறி போலீசாரை தகாத வார்த்தைகளால் திட்டினார். இருப்பினும் போலீசார் அந்த போதை ஆசாமியிடம் பேசி அமைதிப்படுத்த முயன்றனர். அந்த நபர் உன்னால் என்ன செய்யமுடியும் என ஆக்ரோஷமாக பேசிவிட்டு தனது மோட்டார் சைக்கிளை எடுத்துக்கொண்டு புறப்பட சென்றார். அப்போது போலீசார் மோட்டார் சைக்கிளை நிறுத்த முயன்றனர். ஆத்திரமடைந்த போதை ஆசாமி போலீசாரை தகாத வார்த்தைகளால் பேசி சரமாரியாக தாக்கி அவர்கள் அணிந்திருந்த சீருடையை கிழித்தெரிந்தார். இந்த சம்பவத்தினால் அங்கு பொதுமக்கள் கூட்டமாக திரண்டு பெரும் பரபரப்பு ஏற்பட்டது.
இதனைத்தொடர்ந்து சம்பவ இடத்திற்கு வந்த போதை ஆசாமியின் மனைவியும் என்னவென்று தெரியாமல் போலீசாரை தகாத வார்த்தைகளால் திட்டி தீர்த்தார். அவரிடம் பெண் தலைமை காவலர்கள் நடந்ததை விவரித்து கொண்டிருக்கும்போது அந்த போதை ஆசாமி பெண் காவலர்களையும் தகாத வார்த்தைகளால் திட்டி தாக்கினார்.இதனால் ஆத்திரமடைந்த பொதுமக்கள் அந்த போதை ஆசாமிக்கு தர்ம அடி கொடுத்தனர். அவர்களிடம் இருந்து போதை ஆசாமியை மீட்ட போலீசார் ஒரு வழியாக அவரை போலீஸ் வாகனத்தில் ஏற்றி போலீஸ் நிலையம் கொண்டு சென்றனர். இந்த சம்பவத்தில் போதை ஆசாமி தாக்கியதில் பணியில் இருந்த போலீசார் ஒருவர் காயமடைந்தார். அவரை அக்கம் பக்கத்தினர் மீட்டு 108 ஆம்புலன்ஸ் மூலம் சிகிச்சைக்காக ஸ்ரீரங்கம் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். அங்கு அவர் தீவிர சிகிச்சை பிரிவில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருகிறார்.
இந்த சம்பவம் குறித்து போலீசார் பொதுமக்கள் மத்தியில் உருக்கத்துடன் கூறியதாவது, பொதுமக்களுக்கு தனிநபர் ஒருவரால் ஆபத்து ஏற்படுகிறது என்று கேள்விபட்டு சம்பவ இடத்திற்கு விரைந்து வந்து முன்நின்று தட்டி கேட்கிறோம். ஆனால் யாரை தட்டி கேட்கிறோமோ அவர் கையால் அடியும் வாங்கிக்கொண்டு எங்களையும், சட்ட ஒழுங்கையும் காப்பாற்ற நாங்கள் இந்த சமூகத்தில் இன்னும் என்னென்ன இன்னல்களை சந்திக்க நேரிடுமோ? எங்கள் குடும்பத்தை விட்டுவிட்டு மக்கள் பணியே மகேசன் பணி என இந்த உடையை அணிந்து அர்ப்பணிப்புடன் வேலை பார்த்து வருகிறோம். இதுபோன்று எத்தனை இன்னல்கள் வந்தாலும் மக்களுக்காக பணி இருப்போம் என உருக்கத்துடன் கூறினர்.