அரியலூர் மாவட்டம், ஜெயங்கொண்டத்தில் நடைபெறவுள்ள விழாவில் கலந்து கொள்வதற்காக சென்னையில் இருந்து விமானம் மூலம் திருச்சி வந்த விடுதலை சிறுத்தைகள் கட்சியின் தலைவர் எழுச்சித் தமிழர் திருமாவளவன் செய்தியாளர்களுக்கு அளித்த பேட்டியில்:- இலங்கையில் நிகழும் கடுமையான பொருளாதார சரிவால் அங்கு உள்ள ஈழத்தமிழர்கள் உள்ளிட்டோர் கடுமையாக பாதிக்கப்பட்டு வருவதை பார்க்க முடிகிறது. இந்நிலையில் ரேஷன் கடைகளில் அரிசி, பருப்பு போன்ற பொருட்களை வழங்குவது தொடர்பாக தீர்மானத்தை சட்டப்பேரவையில் தமிழக அரசு இயற்றியுள்ளது. இதற்கு உடனடியாக பிரதமர் அனுமதி வழங்கி ஆவணம் செய்ய வேண்டும்.
தமிழக முதல்வரின் இந்த முயற்சி கண்டிப்பாக பாராட்டுதலுக்குரியது அதிமுக உட்பட அனைத்து கட்சிகளும் இந்த விவகாரத்தில் முதல்வருக்கு ஒத்துழைப்பு கொடுக்க முன் வந்துள்ளது. விசிக சார்பில் இரண்டு நாடாளுமன்ற உறுப்பினர்கள் மற்றும் சட்டமன்ற உறுப்பினர்கள் ஒரு மாத சம்பளத்தை முதல்வரிடம் வழங்க உள்ளோம். ஆளுநர் தமிழக சட்டப்பேரவையில் இயற்றும் சட்ட மசோதாக்களை கிடப்பில் போடுவது வேதனைக்கு உரியது. நீட் விளக்கு மசோதா உள்ளிட்ட 11 மசோதாக்கள் ஆளுநரால் இன்னும் டெல்லிக்கு அனுப்பி வைக்கப்படவில்லை. பெட்ரோல் டீசல் விலை உயர்வுக்கு மாநில அரசுகள் தான் காரணம் என்று பிரதமர் கூறுவது வேடிக்கைக்கு உறியதாக உள்ளது. என்னை நிறுவனங்களும் மத்திய அரசும் தான் இந்த விலை உயர்வுக்கு காரணம்.
மாநில அரசு விதிக்கக் கூடிய வரியால் மட்டுமே இந்த அளவிற்கு விலைவாசி உயர்வு போன்ற தோற்றத்தை பிரதமர் ஏற்படுத்துகிறார். இந்த பிரச்சாரத்தை பாரதிய ஜனதா கட்சி கைவிட வேண்டும் என தெரிவித்தார். முன்னதாக திருச்சி விமான நிலையம் வந்த எழுச்சித்தமிழர் தொல்.திருமாவளன் அவர்களை மாநில நிர்வாகி கிட்டு, பெரம்பலூர் நாடாளுமன்றத் தொகுதி செயலாளர் தமிழாதன், மாநகர மாவட்ட துணைச் செயலாளர் புல்லட் லாரன்ஸ் உட்பட பலர் வரவேற்றனர்.