திருச்சி தமிழ்நாடு பிற்படுத்தப்பட்டோர், மிகவும் பிற்படுத்தப்பட்டோர் மற்றும் சிறுபான்மையினர் நலத்துறை காப்பாளர் ஆசிரியர் சங்க மாநில சிறப்பு செயர்குழு கூட்டம் திருச்சியில் நடைபெற்றது. இந்த கூட்டத்திற்கு மாநில நிறுவன தலைவர் சகாதேவன் தலைமை வகித்தார். மாநில தலைவர் முருகேசன், மாநில பொதுச் செயலாளர் மணிமொழி, பொருளாளர் நாராயணசாமி மற்றும் மாநில மாவட்ட காப்பாளர்கள், காப்பாளிகள், பிற்பட்டோர் நலத்துறை பணியாளர்கள் கலந்து கொண்டனர்.
கூட்டத்தில் நிறைவேற்றப்பட்ட தீர்மானங்கள்: காப்பாளர்களுக்கு பதவி உயர்வு வழங்க வேண்டும். கல்லூரி விடுதி, மருத்துவக் கல்லூரி விடுதி, பொறியியல் கல்லூரி விடுதி, அரசு தொழில்நுட்பக் கல்லூரி விடுதி, அரசு தொழில் பயிற்சி நிலைய விடுதிகளுக்கு முதுகலை பட்டதாரி காப்பாளர் என்ற பணியிடத்தை தரம் உயர்த்தி பதவி உயர்வு வழங்க வேண்டும். பிற்படுத்த பட்டோர் மற்றும் மிகவும் பிற்படுத்தப்பட்டோர், சிறுபான்மையினர் நலத்துறையை வருவாய்த்துறை கட்டுப்பாட்டில் இருந்து விடுவித்து தனித்துறையாக பிரித்து அத்துறையில் காப்பாளர்களுக்கு பதவி உயர்வு வழங்க வேண்டும். விடுதிகளுக்கு பராமரிப்பு பணிகளுக்காக ஒதுக்கீடு செய்யப்பட்ட தொகையை பிற பொருள்களை வாங்குவதற்கு பயன்படுத்தக் கூடாது.
புதிய மெனுவில் குறிப்பிடப்பட்டுள்ள பூரி, இடியாப்பம் போன்ற உணவுப் பொருட்களை தயார் செய்து வழங்குவதற்கு நடைமுறை சிக்கல்கள் இருப்பதாலும், புதிய உணவுத் தொகையை அரசு வழங்க காலதாமதம் செய்வதாலும், புதிய உணவு வகையை ரத்து செய்துவிட்டு பழைய உணவு முறையை நடைமுறைப்படுத்த வேண்டும். விடுதிகளில் காலியாக உள்ள காப்பாளர், சமையலர், காவலர், துப்புரவு பணியாளர் பணியிடங்களை உடனடியாக நிரப்ப வேண்டும். புதிய சமையல்களை அரசு நியமனம் செய்யும் வரை விடுதி நிர்வாகத்தை செம்மைப்படுத்த தினக்கூலி அடிப்படையில் சமையலறை நியமனம் செய்ய வேண்டும் உள்ளிட்ட பல தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன.