தமிழ்நாடு வணிகர் சங்கங்களின் பேரமைப்பு மாநில பொதுச்செயலாளர் கோவிந்தராஜூலு மாநகர போலீஸ் கமிஷனர் கார்த்திகேயனிடம் கொடுத்துள்ள கோரிக்கை மனுவில் கூறப்பட்டு இருப்பதாவது:-
வியாபாரிகளின் இக்கட்டான சூழ்நிலையை கருத்தில் கொண்டு தமிழக அரசு அனைத்து கடைகளும் நேர கட்டுப்பாடின்றி இயங்கலாம் என அண்மையில் அறிவித்துள்ளது. இதன் மூலம் தீபாவளி விற்பனைக்கான நேரம் அதிகரிக்கப்பட்டுள்ளது. அதற்காக தமிழக முதல்- அமைச்சர் மு.க.ஸ்டாலினுக்கு வணிகர்களிடம் நல்ல வரவேற்பு கிடைத்துள்ளது.
மேலும் தீபாவளி விற்பனையை கருத்தில் கொண்டும், பொதுமக்களின் நலன் கருதியும் தீபாவளிக்கு முந்தைய நாளான இன்று (புதன்கிழமை) காலை 6 மணி முதல் நாளை (வியாழக்கிழமை) காலை 6 மணி வரையில் தொடர்ந்து 24 மணி நேரமும் தங்கு தடையின்றி வியாபாரம் நடைபெறும் வகையில், பொதுமக்கள் கடை வீதிக்கு வந்து பொருட்களை வாங்கிச் செல்வதற்கு வசதியாக காவல்துறை உரிய பாதுகாப்பு ஏற்பாடுகளை செய்து தர வேண்டும்.
அதே நேரத்தில் இரவு வேளையில் வியாபாரம் செய்யும் வணிகர்களிடம் போலீசார் கடைகளை விரைவாக அடைக்க சொல்வது, கடைகளில் உள்ள பொருட்களை சேதப்படுத்துவது, வணிகர்களை தாக்குவது போன்ற செயல்களில் ஈடுபடாமல் வணிகர்கள் கண்ணியமாக நடத்தப்படுவதை உறுதி செய்ய வேண்டும். இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.