திருச்சி நம்பர் 1 டோல்கேட் மேனகா நகர் பகுதியில் வைரம் அப்பார்ட்மெண்ட்ஸ் உள்ளது. இந்த அப்பார்ட்மெண்டில் 50-க்கும் மேற்பட்ட குடும்பங்கள் வசித்து வருகின்றனர். தற்போது அப்பார்ட்மெண்ட்ஸ் விஸ்தரிப்பு கட்டுமான பணிகள் நடைபெற்று வருகிறது. அதனையொட்டி அப்பார்ட்மெண்ட் அருகே டிரான்ஸ்பார்மரையொட்டி பிரம்மாண்ட விளம்பர பேனர் வைக்கப்பட்டிருந்தது. இந்நிலையில் நேற்று இரவு பெய்த மழையின் காரணமாக பேனர் சரிந்து கீழே விழுந்துள்ளது. விழுந்து கிடந்த அந்த விளம்பர பேனரை மீண்டும் அதே இடத்தில் வைப்பதற்காக மூன்று பேர் இன்று காலை வேலைக்கு வந்துள்ளனர்.
பேனரை கட்டும் பணியில் ஈடுபட்டிருந்த பொழுது எதிர்பாராதவிதமாக அருகிலிருந்த டிரான்ஸ்பார்மர் மின் கம்பியில் உரசியதில் மின்சாரம் தாக்கிய 3 பேரும் தூக்கி வீசப்பட்டனர். மின்சாரம் தாக்கியதில் சம்பவ இடத்திலே இருவர் பலியாகினர். ஒருவர் ஆபத்தான நிலையில் அரசு மருத்துவமனைக்கு சிகிச்சைக்காக கொண்டு சென்றனர். இதுகுறித்து கொள்ளிடம் காவல்துறையினருக்கு தகவல் தெரிவிக்கப்பட்டு சம்பவ இடம் வந்த போலீசார் மின் விபத்து குறித்து விசாரணை நடத்தி வருகின்றனர் முதற்கட்ட விசாரணையில் வைரம் அப்பார்ட்மெண்ட்ஸின் உரிமையாளர் கமாரூதீன் என்பதும் அப்பார்ட்மெண்ட் விற்பனை குறித்த விளம்பர பேனரை வைக்க முற்பட்ட போது மின்சாரம் தாக்கி லால்குடி திருமங்கலத்தை சேர்ந்த செல்லதுரை மற்றும் இன்னொரு வாலிபர் ஆகியோர் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தது தெரியவந்துள்ளது. மேலும் இது குறித்து போலீசார் தீவிர விசாரணையில் ஈடுபட்டு வருகின்றனர்.
அனுமதியில்லாமல் விளம்பர பேனர் வைத்ததற்காக அப்பார்ட்மெண்ட் உரிமையாளர் கமாரூதீனை போலீசார் வலைவீசி தேடி வருகின்றனர்.