திருச்சி அரசு மருத்துவமனை பின்பகுதியில் உள்ள வண்ணாரப்பேட்டை பகுதியில் தமிழக அரசு சார்பில் அடுக்குமாடி குடியிருப்புகள் கட்டப்பட்டு உள்ளது. அந்த குடியிருப்புகளில் குடி இருப்பதற்காக வீடுகள் இல்லாத சுமார் 354 நபர்கள் சுமார் 2.50 லட்சம் ரூபாய் வீதம் தமிழ்நாடு நகர்ப்புர வாழ்விட மேம்பாட்டு வாரியம் அலுவலகத்தில் செலுத்தி உள்ளனர்.
இந்த நிலையில் அவர்களில் 144 பேருக்கு மட்டும் திருச்சி வண்ணாரப்பேட்டை பகுதியில் உள்ள அடுக்குமாடி குடியிருப்பில் வீடுகள் ஒதுக்கப்பட்டுள்ளது. இதனால் மீதமுள்ள 210 பேர் தங்களிடம் பணம் வாங்கிவிட்டு வீடுகள் தர அதிகாரிகள் மறுக்கிறார்கள் என்று கூறி திருச்சி பாலக்கரை பகுதியில் உள்ள தமிழ்நாடு நகர்ப்புர வாழ்விட மேம்பாட்டு வாரியம் அலுவலகத்தில் போராட்டத்தில் ஈடுபட்டனர்.
பின்னர் இதுகுறித்து தர்ணா போராட்டத்தில் ஈடுபட்ட பொதுமக்கள் கூறியதாவது;- “நாங்கள் கடந்த நான்கு ஆண்டுகளுக்கு முன்பாகவே பணத்தை செலுத்தியுள்ளோம். இருந்தபோதிலும் எங்களின் குறிப்பிட்ட சிலருக்கு மட்டும் வீடுகளை ஒதுக்கி விட்டு மீதமுள்ளவர்களுக்கு வீடுகள் தர அதிகாரிகள் மறுத்து வருகிறார்கள். எனவே முதல்வரும் , அமைச்சரும் எங்களுக்கு வீடுகள் வழங்க ஏற்பாடு செய்ய வேண்டும்” என கோரிக்கை வைத்தனர். இந்த போராட்டத்தின் காரணமாக பாலக்கரை பகுதியில் சுமார் இரண்டு மணிநேரத்திற்கு மேலாக பரபரப்பாக காணப்பட்டது.