திருச்சி காவிரி ஆற்றில் தற்போது வினாடிக்கு 50 ஆயிரம் கனஅடி நீரும், கொள்ளிடத்தில் 80 ஆயிரம் கனஅடி நீர் திறந்து விடப்பட்டுள்ளது. இதனால் காவிரி மற்றும் கொள்ளிடம் ஆற்றில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டு கரையோர பகுதியில் உள்ள வயல்வெளியில் தண்ணீர் புகுந்து சேதத்தை ஏற்படுத்தி வருகிறது.
இந்நிலையில் காவிரி நீர் நிலைகளில் தண்ணீர் வரத்து அதிகம் காரணமாக பிச்சாண்டார் கோவில், நொச்சியம்,, பெருகமணி நீர்நிலைப் பகுதிகளில் இருந்து பாதுகாப்பான இடத்தில் உள்ள மண்டபங்களில் தங்க வைக்கப்பட்டுள்ள மக்களுக்கு ரொட்டி, பிஸ்கட் உள்ளிட்ட உணவுப் பொருட்களை நகராட்சி நிர்வாகத் துறை அமைச்சர் கே .என். நேரு வழங்கினார். மேலும் இம்மக்களுக்குத் தொடர்ந்து உணவு மற்றும் மருத்துவ சேவைகளை வழங்கிட அலுவலர்களுக்கு நகராட்சி நிருவாகத்துறை அமைச்சர் உத்தரவிட்டார்.
இந்நிகழ்வின் போது, திருச்சி மாவட்டத்திற்கான கண்காணிப்பு அலுவலர் மற்றும் ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியினர் நலத்துறை முதன்மைச் செயலாளர் டாக்டர். மணிவாசன், மாவட்ட ஆட்சித் தலைவர் பிரதீப் குமார், நீர்வளத்துறை செயற்பொறியாளர் நித்தியானந்தம் , மாவட்ட வருவாய் அலுவலர் அபிராமி, மற்றும் வருவாய்த்துறை, வளர்ச்சித் துறை, நீர்வளத்துறை உள்ளிட்ட துறைகளின் அலுவலர்கள் உடனிருந்தனர்.