வேளாண் உட்கட்டமைப்பு நிதி கருத்தரங்கம் திருச்சியில் இன்று நடந்தது .மாவட்ட கலெக்டர் பிரதீப் குமார் வரவேற்று பேசினார். தமிழ்நாட்டில் வேளாண் உட்கட்டமைப்பு நிதி நிலைமை மற்றும் வாய்ப்புகள் குறித்து வேளாண் உற்பத்தி ஆணையரும், அரசு செயலாளருமான சமய மூர்த்தி பேசினார். கூட்டுறவு சங்கங்களின் பதிவாளர் சண்முகசுந்தரம் தொடக்க வேளாண்மை கூட்டுறவு கடன் சங்கத்தில் வேளாண்மை உட்கட்டமைப்பு நிதியின் தாக்கம் குறித்து பேசினார்.
வேளாண்மை விற்பனை மற்றும் வேளாண் வணிகத்துறை இயக்குனர் நடராஜன் அறிமுக உரையாற்றினார். மாநாட்டை நகராட்சி நிர்வாக துறை அமைச்சர் கே.என்.நேரு தொடங்கி வைத்து விழாப்பேருரை ஆற்றினார். வேளாண் மற்றும் உழவர் நலத்துறை அமைச்சர் எம்.ஆர்.கே.பன்னீர்செல்வம் தலைமை உரையாற்றினார். பள்ளிக் கல்வித் துறை அமைச்சர் அன்பில் மகேஷ் பொய்யாமொழி சிறப்புரையாற்றினார்.
அறுவடை பின் செய் நேர்த்தி நிபுணர் அர்சோ, தேசிய உணவு தொழில் நுட்ப இயக்குனர் லோகநாதன், மத்திய திட்ட நிர்வாக அலகு குழு தலைவர் அஸ்வானி மிட்டல், வேளாண் உழவர் நலத்துறை அமைச்சகத்தின் இணைச்செயலாளர் சாமுவேல் பிரவீன் குமார், தேசிய விவசாய மற்றும் கிராமப்புற வளர்ச்சி வங்கி தலைமை பொது மேலாளர் வெங்கடகிருஷ்ணன், வேளாண் உட்கட்டமைப்பு நிதி துணை இயக்குனர் பூஜா சிங், தமிழ்நாடு அரசுதொழில் வளர்ச்சிக் கழகத்தின் துணைத் தலைவர் ஆனந்தன், மண்டல தலைவர் சோபனா, மாநில அளவிலான வங்கிகள் கூட்டமைப்பின் ஒருங்கிணைப்பாளர் ஆகியோர் விளக்க உரையாற்றினர். முடிவில் ஒழுங்குமுறை விற்பனை கூடத்தின் வேளாண் இணை இயக்குனர் உமாதேவி நன்றி கூறினார்.மாநாட்டிற்கான ஏற்பாடுகளை திருச்சி வேளாண் வணிக துணை இயக்குனர் சரவணன் செய்திருந்தார்.
மாநாட்டில் வேளாண்மை மற்றும் உழவர் நலத்துறை அமைச்சர் எம்.ஆர்.கே.பன்னீர்செல்வம் பேசியதாவது:- வேளாண் உட்கட்டமைப்பு நிதி திட்டத்தின் கீழ் 12 ஆண்டிற்கு தமிழ்நாட்டிற்கு 5990 கோடி ரூபாய் நிதி ஒதுக்கப்பட்டுள்ளது. இத்திட்டத்தில் உட்கட்டமைப்பு வசதிகளை ஏற்படுத்துவதன் மூலம் 15 முதல் 20 சதவீதம் வரை அறுவடைக்கு பின் ஏற்படும் இழப்புகளை குறைக்க முடியும். இத்திட்டத்தின் மூலம் தொடக்க வேளாண்மை கடன் சங்கங்கள், உழவர் உற்பத்தியாளர் நிறுவனங்கள், தொழில் முனைவோர்கள் ஆகியோர் பயன்பெறலாம்.. இத்திட்டத்தில் ஒரு தனி நபரோ அல்லது நிறுவனமோ அதிகபட்சமாக 2 கோடி ரூபாய் வரை மூன்று சதவீதம் வட்டி குறைப்புடன் கடன் பெறலாம் .இவ்வாறு அவர் பேசினார்.