அதிமுக பொதுச் செயலாளர் தேர்தலுக்கு தடை விதிக்கக் கோரியும், பொதுக்குழு தீர்மானங்களுக்கு எதிராகவும் ஓ.பன்னீர்செல்வம் தரப்பினர் சென்னை உயர்நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தனர். இருதரப்பு வாதங்களும் கடந்த 22ம் தேதி முடிவடைந்த நிலையில் மார்ச் 28ம் தேதி நீதிபதி கே.குமரேஷ்பாபு தீர்ப்பளித்தார்.அந்த தீர்ப்பில், அதிமுக பொதுக்குழு மற்றும் பொதுச்செயலாளர் தேர்தலுக்கு எதிராக தொடரப்பட்ட மனுக்கள் தள்ளுபடி செய்யப்பட்டன. ஓபிஎஸ் தரப்பில் தாக்கல் செய்யப்பட்ட 4 இடைக்கால மனுக்கள் நிராகரிப்பட்டன. மேலும் பொதுக்குழு மற்றும் பொதுக்குழுவில் எடுக்கப்பட்ட தீர்மானங்கள் அனைத்தும் செல்லும் என தெரிவிக்கப்பட்டது.
இதைத் தொடர்ந்து அதிமுகவின் பொதுச்செயலாளராக எடப்பாடி பழனிசாமி அறிவிக்கப்பட்டார். பின்னர் பொதுச் செயலாளராக தேர்ந்தெடுக்கப்பட்ட எடப்பாடி பழனிசாமியை அங்கீகரிக்க கோரி அதிமுக தரப்பிலிருந்து தேர்தல் ஆணையத்திடம் மனு அளிக்கப்பட்டது.இந்நிலையில் இந்திய தேர்தல் ஆணையம் வெளியிட்டுள்ள அறிக்கையில், எடப்பாடி பழனிசாமியை அதிமுகவின் பொதுச்செயலாளராக அங்கீகரித்து உத்தரவிட்டுள்ளது. மேலும் அதிமுகவின் சட்டவிதிகள் திருத்தம், நிர்வாகிகள் மாற்றம் போன்றவற்றை ஏற்கப்பட்டதாகவும் தேர்தல் ஆணையம் அறிவித்துள்ளது.
இதையடுத்து தமிழகம் முழுவதும் திமுகவினர் கொண்டாடி வருகின்றனர். இதை போல திருச்சி புறநகர் வடக்கு மாவட்ட கழகம் சார்பாக ஸ்ரீரங்கத்தில் அதிமுகவின் பொதுச் செயலாளராக எடப்பாடி பழனிச்சாமியை, தேர்தல் ஆணையம் அங்கீகரித்ததற்கு பொதுமக்களுக்கு இனிப்பு வழங்கி கொண்டாடினர். இதில் மாவட்ட பிரதிநிதி ஏகாம்பரம் தலைமையில் வட்டச்செயலாளர்கள் எஸ்.வி.சேகர், செந்தில் மற்றும் இளையராஜா, சுப்ரமணியன், பிரியா சம்பத் உள்ளிட்டோர் கலந்துகொண்டனர்.