108 வைணவ திருத்தலங்களில் முதன்மையானதும் பூலோக வைகுண்டம் என அனைவராலும் போற்றப்படும் திருச்சி ஸ்ரீரங்கம் அருள்மிகு ரங்கநாதர் கோவிலில் வைகுண்ட ஏகாதசி திருவிழா கடந்த மாதம் 22 ஆம் தேதி திருநெடுந்தண்டவத்துடன தொடங்கி நடைபெற்று வருகிறது.
அதனைத் தொடர்ந்து இம்மாதம் 2ம் தேதி சொர்க்கவாசல் திறக்கப்பட்டது. இதைத்தொடர்ந்து ராப்பத்து நாட்களில் நம்பெருமாள் கோவிலின் 5-ம் பிரகாரத்தில் உள்ள ஆயிரங்கால் மண்டபத்தில் உள்ள திருமாமணி ஆஸ்தான மண்டபத்தில் எழுந்தருளி அரையர்கள் இசைக்கும் திருவாய்மொழி பாசுரங்களை கேட்டபடி பக்தர்களுக்கு சேவை சாதித்து வருகிறார்.ராப்பத்து உற்சவத்தின் 8ம் நாளான இன்று திருமங்கை மன்னன் வேடுபறி நிகழ்ச்சி நடைபெற்றது.
இந்நிகழ்ச்சியை ஒட்டி மாலை 5 மணிக்கு சந்தனு மண்டபத்தில் இருந்து நம்பெருமாள் தங்கக்குதிரை வாகனத்தில் புறப்பட்டு மாலை 5.30 மணி முதல் 6 மணி வரை வையாளி வகையறா கண்டருளினார். இதில் ஏராளமான பக்தர்கள் கலந்து கொண்டு சுவாமி தரிசனம் செய்தனர்.