108 வைணவ தளங்களில் முதன்மையானதும் பூலோக வைகுண்டம் என போற்றப் படுவதுமான திருச்சி ஸ்ரீரங்கம் ரங்கநாதர் கோயிலுக்கு தமிழக மட்டுமல்லாது பிற நாடுகள், மாநிலங்கள், மாவட்டங்களில் இருந்து தினமும் பல்லாயிரக்கணக்கான பக்தர்கள் வந்து வழிபாடு செய்து செல்கின்றனர். உலக பிரசித்தி பெற்ற ஶ்ரீரங்கம் திருக்கோயிலுக்கு வரும் பக்தர்கள் இறங்கி செல்ல ஏதுவாக இன்றைய தினம் வரை பேருந்து நிலையம் எதுவும் ஸ்ரீரங்கத்தில் இல்லாததால் பொதுமக்கள் பக்தர்கள் கடும் சிரமத்திற்கு உள்ளாகி வந்தனர். இப்பகுதியில் மட்டும் சுமார் 1லட்சத்து 2000க்கும் மேற்பட்ட பொதுமக்கள் வசித்து வருகின்றனர்.

ஆனால் ஸ்ரீரங்கத்தில் இதுவரை உள்ளூர் மற்றும் வெளியூர்களில் இருந்து வரும் பேருந்துகள், சுற்றுலா பேருந்துகளுக்கு என தனியாக பேருந்து நிலையம் இல்லை. ஶ்ரீரகத்திற்கு வரும் வாகனங்கள் அனைத்தும் சாலையோரங்களில் நிறுத்தப்படுவதால் நாளுக்கு நாள் போக்குவரத்து நெரிசல் அதிகமாகி வருகிறது இதனால் ஸ்ரீரங்கத்தில் உள்ளூர் பேருந்து நிலையம் கட்டப்பட வேண்டும் என அப்பகுதி மக்கள் நீண்ட நாட்களாக கோரிக்கை வைத்து வந்திருந்தனர். இதனைத் தொடர்ந்து நகராட்சி நிர்வாகத்துறை அமைச்சர் கே.என்.நேரு உத்தரவின் பெயரில் ஸ்ரீரங்கத்தில் புதிய பேருந்து நிலையம் அமைக்க ஸ்ரீரங்கம் அரசு மருத்துவமனை எதிரில் உள்ள மாநகராட்சிக்கு சொந்தமான ஒரு ஏக்கர் நிலம் தேர்வு செய்யப்பட்டது.

 இதனை தொடர்ந்து ஶ்ரீரங்கத்தில் ரூபாய் 11.10 கோடி செலவில் புதிய பேருந்து நிலையம் கட்டுவதற்கு தமிழக அரசு அனுமதி வழங்கியது. இதனைத் தொடர்ந்து இன்று திருச்சி மாநகராட்சி நிர்வாகம் மற்றும் குடிநீர் வழங்கல் துறை சார்பில் மூலதன மானிய நிதி 2023-24 ன் கீழ் ரூபாய் 11.10 கோடி திட்ட மதிப்பீட்டில் ஸ்ரீரங்கத்தில் புதிய பேருந்து நிலையம் அமைக்கும் பணி துவக்க விழாவில் நகராட்சி நிர்வாக துறை அமைச்சர் கே.என்.நேரு அடிக்கல் நாட்டி பணிகளை தொடங்கி வைத்தார்..இந்நிகழ்வில் மாவட்ட ஆட்சியர் பிரதீப் குமார், மாநகராட்சி ஆணையர் வைத்திநாதன், மாநகராட்சி மேயர் அன்பழகன், சட்டமன்ற உறுப்பினர் பழனியாண்டி, உள்ளிட்ட அரசு அதிகாரிகள் பலர் கலந்து கொண்டனர்..

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *