ஸ்ரீரங்கம் ரெங்கநாதர் கோவிலில் ரெங்கநாச்சியார் நவராத்திரி உற்சவம் இன்று 26-ம் தேதி தொடங்கி வரும் அக்டோபர் 4-ந் தேதி வரை 9 நாட்கள் நடைபெறுகிறது. உற்சவத்தின் முதல் நாளான இன்று பகல் 1.30 மணிமுதல் மாலை 3.30 மணிவரை மூலஸ்தானத்தில் ரெங்கநாச்சியார் திருமஞ்சனம் கண்டருளுளினார். 2ம் திருநாள் முதல் 6ம் திருநாளான 27, 28, 29, 30, 1-ந் தேதி மற்றும் 8ம் திருநாளான 3-ந்தேதியும் ரெங்கநாச்சியார் மூலஸ்தானத்திலிருந்து மாலை 5.30 மணிக்கு புறப்பட்டு கொலு மண்டபத்திற்கு மாலை 6 மணிக்கு வந்து சேருகிறார்.
விழாவின் முக்கிய நிகழ்ச்சியான 7ம் திருநாளான 2 –ந் தேதி அன்று ஆண்டு ஒருமுறை மட்டுமே நடைபெறும் தாயார் திருவடி சேவை நடைபெறுகிறது. இந்நிலையில் நவராத்திரி விழாவை முன்னிட்டு யானை ஆண்டாள் நொண்டியடித்தபடி மவுத் ஆர்கன் வாசிக்கும் நிகழ்ச்சி கடந்த ஆண்டுகளுக்கு முன் வரை வழக்கத்தில் இருந்தது. யானை துன்புறுத்தப்படுவதாக கோர்ட்டில் வழக்கு தொடரப்பட்டதால் நொண்டியடிக்கும் முறை கைவிடப்படடது. மவுத் ஆர்கன் வாசிக்கும் முறை மட்டும் நடைமுறையில் உள்ளது. கோவில் யானைகள் ஆண்டாள், லெட்சுமிக்கு அலங்காரம் செய்யப்பட்டு கொலுசுகள் அணிவிக்கப் பட்டிருந்தன.
தாயாருக்கு யானைகள் ஆண்டாள் லெட்சுமி இணைந்து சாமரம் வீசி மவுத் ஆர்கன் வாசித்ததை ஏராளமான பக்தர்கள் கண்டு வியந்தனர். இதை பக்தர்கள் செல்போன்களில் வீடியோ, படம் எடுத்தனர். விழாவின் 9ம் நாளான 4-ந்தேதி சரஸ்வதி பூஜையுடன் நவராத்திரி உற்சவ விழா நிறைவடைகிறது. விழாவிற்கான ஏற்பாடுகளை கோவில் இணைஆணையர் மாரிமுத்து மற்றும் பணியாளர்கள் செய்து வருகின்றனர்.