108 வைணவ திருத்தலங்களில் முதன்மையானதும், பூலோக வைகுண்டம் என அனைவராலும் போற்றப்படுவதுமான திருச்சி ஸ்ரீரங்கம் அரங்கநாதர் கோவிலில் ஆண்டு முழுவதும் பல்வேறு திருவிழாக்கள் நடைபெறும். இதில் வைகுண்ட ஏகாதசி விழா மிகவும் பிரசித்தி பெற்றது. வைகுண்ட ஏகாதசி பெருவிழா 21 நாட்கள் கோலாகலமாக நடைபெறுவது வழக்கம். அதன்படி இந்த ஆண்டுக்கான வைகுண்ட ஏகாதசி திருவிழா திருநெடுந்தாண்டகம் நிகழ்ச்சியுடன் கடந்த 19ம் தேதி தொடங்கியது. இதையடுத்து பகல்பத்து உற்சவத்தின் முதல் நாளான திருமொழி திருவிழா 20ம் தேதி தொடங்கியது. பகல்பத்தின் ஒவ்வொரு நாளும் உற்சவர் நம்பெருமாள் வெவ்வேறு அலங்காரத்தில் அர்ஜுன மண்டபத்தில் எழுந்தருளி பக்தர்களுக்கு சேவை சாதித்தார்.

பகல்பத்து உற்சவத்தின் 10-ம் நாளான நேற்று நம்பெருமாள் நாச்சியார் திருக்கோலம் எனப்படும் மோகினி அலங்காரத்தில் எழுந்தருளி பக்தர்களுக்கு சேவை சாதித்தார். விழாவின் முக்கிய நிகழ்வான சொர்க்க வாசல் (பரமபத வாசல் ) திறப்பு ராப்பத்து உற்சவத்தின் முதல் நாள் வைகுண்ட ஏகாதசி திருநாள் ஆகும். அதன்படி இன்று அதிகாலை 4.30 மணிக்கு நம்பெருமாள் மூலஸ்தானத்தில் இருந்து புறப்பட்டு அதிகாலை 5.45 மணிக்கு வந்தடைந்தார். தொடர்ந்து பரமபதவாசல் எனப்படும் சொர்க்க வாசல் திறக்கும் வைபவம் நடைபெற்றது. தனுர் லக்னத்தில் மூலஸ்தானத்திலிருந்து புறப்பட்ட நம்பெருமாள் ரத்தின அங்கி, பாண்டியன் கொண்டை, கிளிமாலை, வைர அபயஸ்தம் உட்பட பல்வேறு திரு ஆபரணங்கள் அணிந்து திருச்சுற்றில் உள்ள தங்க மரத்தை சுற்றி வந்து பரமபதவாசல் எனப்படும் சொர்க்கவாசல் வழியாக கடந்து வந்தார். அப்போது லட்சக்கணக்கான பக்தர்கள் ரெங்கா, ரெங்கா ,வெங்கடா பிரபு ,கோவிந்தா கோவிந்தா என பக்தி கோஷமிட்டவாறு பரமபத வாசலைக் கடந்துச் சென்றனர்.

பின்னர் நம்பெருமாள் பக்தர்களுக்கு நேரடியாகச் சென்று காட்சி தரும் திருகொட்டகை பிரவேசம் கண்டருளினார். ஆயிரங்கால் மண்டபத்திற்கு வந்தடைந்து பக்தர்களுக்கு பொதுஜன சேவை கண்டருளினார். ஆயிரம் கால் மண்டபத்தில் எழுந்தருளியுள்ள நம்பெருமாளை இன்று இரவு 11 மணி வரை பக்தர்கள் தரிசனம் செய்யலாம்.

இதனை தொடர்ந்து ஆயிரங்கால் மண்டபத்தில் இருந்து நள்ளிரவு 12 மணிக்கு புறப்பட்டு அதிகாலை 1.15 மணிக்கு வீணை வாத்தியத்துடன் மூலஸ்தானம் சென்று அடைவார். சொர்க்கவாசல் திறப்பை முன்னிட்டு லட்சக்கணக்கான பக்தர்கள் நம்பெருமாளை நீண்ட வரிசையில் நின்று பக்திபரவசத்துடன் சேவித்து வருகின்றனர். பக்தர்களின் பாதுகாப்பு கருதி 300 சிசிடிவி கேமராக்கள் மூலம் தொடர்ந்து கண்காணிக்கப்படுகிறது மேலும் எந்தவித அசம்பாவிதமும் ஏற்படாத வண்ணம் சுமார் 3000 போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபடுத்தப்பட்டுள்ளனர்.
