தமிழ்நாடு பட்டதாரி முதுநிலை பட்டதாரி ஆசிரியர் கழகத்தின் மாநில செயற்குழு கூட்டம் திருச்சி மத்திய பேருந்து நிலையம் அருகே உள்ள தமிழ்நாடு ஹோட்டல் கூட்ட அரங்கில் இன்று நடைபெற்றது. இந்த கூட்டத்திற்கு மாநிலத் தலைவர் மகேந்திரன் தலைமை தாங்கினார் மாநில பொதுச் செயலாளர் சுந்தரமூர்த்தி முன்னிலை வகித்தார் சிறப்பு அழைப்பாளராக அமைப்பின் சிறப்பு தலைவர் சுப்பிரமணியன் கலந்து கொண்டு சிறப்புரையாற்றினார். இந்த மாநில செயற்குழு கூட்டத்தில் மாநில நிர்வாகிகள் உள்ளிட்ட மாநில செயற்குழு உறுப்பினர்கள் ஏராளமானோர் கலந்து கொண்டு தீர்மானங்களை நிறைவேற்றினர்.

முன்னதாக மாநில தலைவர் மகேந்திரன் நிருபர்களுக்கு அளித்த பேட்டியில் கூறியதாவது:- கடந்த 1-4-2003 க்கு பிறகு நியமனம் செய்யப்பட்ட ஆசிரியர்கள் அரசு பணியாளர்களுக்கு நடைமுறைப்படுத்தப்பட்டுள்ள ஓய்வூதிய திட்டத்தை ரத்து செய்து பழைய ஓய்வூதிய திட்டத்தை நடைமுறைப்படுத்துவோம் என கடந்த 2021 ஆம் ஆண்டு தமிழக சட்டமன்ற பொது தேர்தல் அறிக்கையில் திமுக வழங்கிய வாக்குறுதியை விரைந்து நிறைவேற்றிடக் கோரியும், பட்டதாரி ஆசிரியர்களுக்குரிய பதவி உயர்வுகளுக்கான முதுநிலை பட்டதாரி ஆசிரியர் மற்றும் உயர்நிலை பள்ளி தலைமை ஆசிரியர் பதவி உயர்வுகளை எப்போதும் போல பனி மூப்பு அடிப்படையிலேயே வழங்கிட கோரியும், ஜாக்டோ ஜியோ பேரமைப்பு சார்பில் பழைய ஓய்வூதியம் வழங்கிட வேண்டுவது உள்ளிட்ட 10 அம்ச கோரிக்கைகளை வலியுறுத்தி வருகிற ஜனவரி 6ஆம் தேதி முதல் தொடர் வேலை நிறுத்த போராட்டம் நடைபெறும் என செயற்குழு கூட்டத்தில் தீர்மானம் நிறைவேற்றப்பட்டுள்ளதாக தெரிவித்தார்.
