தமிழகத்தில் பத்தாம் வகுப்பு பொதுத்தேர்வு இன்று தொடங்கியது. அதன் படி திருச்சி மாவட்டத்தில் இன்று 58 மையங்களில் மெட்ரிகுலேஷன் அரசு பள்ளிகள் அரசு உதவி பெறும் பள்ளிகள் என மொத்தம் 13,568 மாணவ மாணவிகள் தேர்வு எழுதினர். திருச்சி மத்திய சிறை கைதிகள் மற்றும் மாற்றுத்திறனாளிகள் தேர்வு எழுதுவதற்கு சிறப்பு ஏற்பாடுகள் செய்யப்பட்டு இருந்தது.
குறிப்பாக பத்தாம் வகுப்பு பொதுத்தேர்வு எழுதும் அனைத்து மாணவ மாணவிகளும் காலை 8 மணிக்கு பள்ளிக்கு வந்தனர். மேலும் முககவசம் அணிந்தும் கிருமி நாசினி கைகளில் தெளிக்கப்பட்டு தேர்வு மையத்திற்குள் மாணவ மாணவிகள் மற்றும் ஆசிரியர்கள் அனுமதிக்கப்பட்டனர் வேறு யாருக்கும் அனுமதி அளிக்கப்படவில்லை. அரசு பொதுத் தேர்வு என்பதால் ஆள்மாறாட்டம் மற்றும் காப்பி அடிப்பதை தடுக்க மாவட்ட முதன்மை கல்வி அலுவலர் தலைமையில் பறக்கும் படைகள் அமைக்கப்பட்டு கண்காணிப்பு பணியை மேற்கொண்டனர். தமிழகம் முழுவதும் 9.95 லட்சம் மாணவ மாணவியர் தேர்வு எழுதுகின்றனர்.