இந்தியாவில் கொரோனா 2ம் அலை தீவிரமாக பரவிவரும் நிலையில், கடந்த சில தினங்களாக கொஞ்சம் கொஞ்சமாக குறைந்துவருகிறது. கொரோனாவால் கடுமையாக பாதிக்கப்பட்ட மாநிலங்களில் தமிழ்நாடும் ஒன்று. கொரோனா அச்சுறுத்தலுக்கு மத்தியில் பிளஸ் 2 பொதுத்தேர்வை நடத்துவது பெரும் குழப்பமாகவும் விவாதமாகவும் இருந்துவந்தது. பொதுத்தேர்வை நடத்த வேண்டும் மற்றும் நடத்த வேண்டாம் என்ற இருவேறு கருத்துகளும் நிலவின. இதுகுறித்து கல்வியாளர்கள், மருத்துவ வல்லுநர்கள், பெற்றோர்கள் உள்ளிட்ட பல தரப்பினருடன் ஆலோசித்த பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் அன்பில்மகேஷ் பொய்யாமொழி ஆலோசனை நடத்தி, அந்த ரிப்போர்ட்டை முதல்வர் மு.க.ஸ்டாலினிடம் கொடுத்தார். எனினும் இதுகுறித்த இறுதி முடிவை முதல்வர் தான் எடுப்பார் என்றும் அன்பில்மகேஷ் தெரிவித்திருந்தார்.இந்நிலையில், பிளஸ் 2 பொதுத்தேர்வை தமிழகத்தில் ரத்து செய்யப்படுவதாக தமிழக அரசு அதிகாரப்பூர்வமாக அறிவித்துவிட்டது. மாணவர்களின் உடல்நிலையை கருத்தில்கொண்டு பிளஸ் 2 பொதுத்தேர்வு ரத்து செய்யப்படுவதாக முதல்வர் மு.க.ஸ்டாலின் அறிவித்துள்ளார். தேர்வை தொடர்ந்து ஒத்திவைத்துக்கொண்டே இருப்பது மாணவர்களின் மனநிலையை பாதிக்கும் என்பதால், மருத்துவ வல்லுநர்களின் ஆலோசனைப்படி பொதுத்தேர்வை ரத்து செய்வதாக அறிவித்துள்ளார்.