திருவாரூர் மாவட்டம் முதன்மை கல்வி அலுவலர் அலுவலகம் முன்பாக திமுக அரசை கண்டித்து 2013 ஆசிரியர் தகுதித் தேர்வில் தேர்ச்சி பெற்றோர் நல சங்கம் சார்பில் திமுக அரசு கண்டித்து டார்ச் லைட் அடித்து நூதன போராட்டத்தை இன்று நடத்தினர். இந்த கண்டன போராட்டத்திற்கு மாநில தலைவர் இளங்கோவன் தலைமை தாங்கினார். மாநிலத் துணைத் தலைவர் பிரபாகரன் மாநில செயலாளர் சண்முகப்பிரியா மாநில பொருளாளர் ஹரிஹரசுதன் மாநில அமைப்பாளர் ஸ்ரீதர் ஆகியோர் முன்னிலை வகித்தனர். இந்த கண்டன ஆர்ப்பாட்டத்தின் கோரிக்கைகளாக:-
2013 ஆம் ஆண்டு ஆசிரியர் தகுதித்தேர்வில் தேர்ச்சி பெற்றும் ஏறக்குறைய 12 ஆண்டுகளாக அடிப்படை வாழ்வாதாரம் இழந்து தவித்து வருகிறோம். எங்களது கோரிக்கையை வலியுறுத்தி இதுவரை 90 க்கும் மேற்பட்ட போராட்டங்களை எடுத்தும் எந்தவொரு தீர்வும் எட்டப்படவில்லை. ஏற்கனவே ஆசிரியர் தகுதித்தேர்வில் தேர்ச்சி பெற்றவர்களுக்கு மீண்டும் மற்றொரு நியமனத் தேர்வு என்ற (அரசாணை 149 ஐ) இருள் சூழ்ந்த அரசாணை என்றும் இந்தத் தேர்வு ஊழலுக்கு வழிவகுக்கும் என்றும் திமுக கழக அரசு அமைந்தவுடன் மற்றுமொரு நியமனத்தேர்வு ரத்து செய்யப்படும் என எதிர்க்கட்சித் தலைவராக இருந்தபோது மு.க.ஸ்டாலின் அவர்கள் எங்களுக்காக வாக்குறுதி அளித்தார். கடந்த காலங்கனில் எதிர்க்கட்சித் தலைவராக இருந்தபோது எங்களுக்காக தொடர்ந்து குரல் கொடுத்தார். சட்டசபையில் கேள்வி எழுப்பினார் திமுக தேர்தல் அறிக்கை 177-ம் இடம் பெறச்செய்தார்.
மேலும் எங்கள் கோரிக்கையை வலியுறுத்தி உங்கள் தொகுதியில் ஸ்டாலின் செயலியில் 2000 மனுக்களை பதிவு செய்தோம். ஆட்சிப் பொறுப்பேற்று 100 நாளில் சரி செய்யப்படும் என சொல்லப்பட்ட அத்திட்டம் நான்கரை ஆண்டுகள் கடந்த போதும் எங்கள் கோரிக்கைகள் கிடப்பிலே கிடக்கிறது. மேலும் அவரது வாக்குறுதியும் திமுக தேர்தல் அறிக்கை 177-ம் இன்றுவரை நிறைவேற்றப்படாமலே உள்ளது. இந்த நிலையை கண்டித்து பல்வேறு கட்ட போராட்டங்களை எடுத்தும் எங்களுக்கு ஒரு நல்லதொரு தீர்வு இதுவரை எட்டப்படவில்லை. அரசு பள்ளிகளில் தற்காலிக ஆசிரியர் பணி கூட அரசியல் தலையீடுகளால் எங்களுக்கு வழங்கப்படுவது கிடையாது. திராவிட மாடலின் விடியல் ஆட்சியில் எங்களுக்கு விடியல் பிறக்கவில்லை. திமுக அரசை நம்பி வாக்களித்து வரலாற்றுப்பிழையை செய்துவிட்டோம்.
முதல்வரின் சொந்தமண்ணிலே எங்களுக்கு விடியல் பிறக்கவில்லை. அதை வெளிப்படுத்தும் விதமாக பட்டப்பகலில் டார்ச் லைட் அடித்து விடியலைத்தேடி நூதன போராட்டத்தை முன்னெடுத்துள்ளோம். மேலும் திமுக அரசு சொன்னபடி ஆசிரியர் தகுதித்தேர்வில் தேர்ச்சி பெற்றவர்களுக்கு நியமனத்தேர்வை இரத்து செய்யப்பட்டு முதுநிலை சீனியாரிட்டி அடிப்படையில் பணி வழங்க வேண்டும். குறைந்தபட்சம் எங்களை தொகுப்பூதியத்தின் அடிப்படையிலாவது எங்களை பணியமர்த்தி எங்கள் வாழ்வாதாரம் காத்திட வேண்டும். எங்களது குறைந்தபட்ச கோரிக்கையை கூட திமுக அரசு நிறைவேற்றாவிட்டால் வருகின்ற சட்டசபை தேர்தலில் தக்க பாடம் புகட்டுவோம். என தெரிவித்தனர்.