2013 ஆசிரியர் தகுதி தேர்வில் தேர்ச்சி பெற்றோர் நல சங்கத்தின் மாநில தலைவர் இளங்கோவன் திருச்சியில் இன்று நிருபர்களுக்கு பேட்டி அளித்தார்.அப்போது அவர் கூறியதாவது:- அரசு பள்ளிகளில் ஆசிரியராக பணியாற்றக்கூடிய ஆசிரியர்களுக்கு பதவி உயர்வு பெறுவதற்கும்,தங்களது பணியை தக்க வைத்துக் கொள்ளவும் ஆசிரியர் தகுதி தேர்வு கட்டாயம் தேர்ச்சி வேண்டும் என்று உச்ச நீதிமன்ற நீதிபதிகள் மாணவர்கள் நலன் மீதும், கற்றல் அடைவுகள் மீதும் நம்பிக்கை கொண்டு சிறந்த தீர்ப்பு அளித்து வழிகாட்டு நெறிமுறைகளை வழங்கியுள்ளனர் இச்சூழலில் பணியில் இருக்கக்கூடிய ஆசிரியர்களுக்கு தனியே சிறப்பு தகுதி தேர்வு நடத்த தமிழக அரசு திட்டமிட்டு வருகிறது.
இந்த நிலைப்பாட்டை 2013 ஆம் ஆண்டு ஆசிரியர் தகுதி தேர்வில் தேர்ச்சி பெற்று ஏறக்குறைய 60 ஆயிரம் ஆசிரியர்கள் 12 ஆண்டுகளாக பணியின்றி வாழ்வாதாரம் இழந்து தவித்து வருவதை வன்மையாக கண்டிக்கிறோம் தமிழக அரசு தனியே ஒரு தகுதி தேர்வு என்ற நிலைப்பாட்டை எடுத்திருப்பது வரலாற்று பிழையாகும் உச்ச நீதிமன்ற தீர்ப்பின் அடிப்படையில் தேர்ச்சி பெற்று தகுதியான ஆசிரியர்கள் பணி இன்றி தவித்து வரும் இந்த தமிழகத்தில் பணியில் இருக்கும் ஆசிரியர்களுக்கு வேறு ஒரு கண்ணோட்டத்தில் தகுதி தேர்வில் இருந்து காப்பாற்ற முயற்சிப்பது வேதனை அளிக்கக்கூடிய செயலாகும். இச்செயலை வன்மையாக கண்டிப்பதுடன் நியாயத்தை நிலைநாட்ட நீதிமன்றத்தில் வழக்கு தொடர உள்ளோம். மேலும் தொடர்ந்து 2013 ஆம் ஆண்டு தகுதி தேர்வில் தேர்ச்சி பெற்ற எங்களை வஞ்சிக்க கூடிய செயலை இந்த அரசு செய்தால் மாநிலம் தழுவிய போராட்டத்தை முன்னெடுப்போம் இவ்வாறு அவர் கூறினார் பேட்டியின் போது மாநிலத் துணைத் தலைவர் பிரபாகரன் மாநில செயலாளர் முருகன் மாநில நிர்வாகி ரோகிணி வடிவேல் மற்றும் நிர்வாகிகள் உடன் இருந்தனர்.