44 – வது உலக செஸ் ஒலிம்பியாட் போட்டி ஜூலை 28 முதல் ஆகஸ்ட் 10 வரை சென்னை மாமல்லபுரத்தில் நடைபெற உள்ளது . இதுவரை இந்தியாவில் நடைபெற்ற விளையாட்டு நிகழ்வுகளிலேயே மிகப்பெரிய போட்டியாக கருதப்படும் இந்த ஒலிம்பியாட் போட்டியில் உலகின் முதல் நிலை கிராண்ட் மாஸ்டர்கள் கலந்து கொள்ள உள்ளனர் . 188 நாடுகளை சேர்ந்த பல்வேறு விளையாட்டு வீரர்கள் கலந்து கொள்ள உள்ளனர் .

இது குறித்து மாவட்ட நிர்வாகத்தின் சார்பில் பொதுமக்களுக்கு விழிப்புணர்வு ஏற்படுத்தும் வகையில் பல்வேறு விளம்பர பணிகள் மேற்கொள்ளப்பட்டு வருகிறது . ஒவ்வொரு நாளும் மக்களுக்கு தெரியும் வண்ணம் செஸ் ஒலிம்பியாட் போட்டிகள் குறித்த விழிப்புணர்வு பணிகளும் நடைபெற்று வருகிறது.

அதன் ஒரு பகுதியாக திருச்சி மாவட்ட நிர்வாகம் மற்றும் தமிழ்நாடு விளையாட்டு மேம்பாட்டு ஆணையம் சார்பில் திருச்சி அண்ணா விளையாட்டு அரங்க வளாகத்தில் “இது நம்ம சென்னை நம்ம செஸ்” என்ற தலைப்பில் வைக்கப்பட்டிருந்த விழிப்புணர்வு கையெழுத்து பலகையில் திருச்சி மாவட்ட கலெக்டர் பிரதீப் குமார் கையெழுத்திட்டு தொடங்கி வைத்தார்.

அதனைத் தொடர்ந்து விளையாட்டு பயிற்சியாளர்கள் விளையாட்டு வீரர் வீராங்கனைகள் ஆகியோர் தங்களின் கையெழுத்தை விழிப்புணர்வு பலகையில் பதிவு செய்தனர். முன்னதாக கலெக்டர் பிரதீப் குமார் இந்த விழிப்புணர்வு நிகழ்ச்சியில் பங்கேற்ற விளையாட்டு வீரர்களுடன் செஸ் போட்டி குறித்து கலந்துரையாடினார். அதனைத் தொடர்ந்து அருகே வைக்கப்பட்டிருந்த 44-வது செஸ் ஒலிம்பியாட் விளையாட்டுப் போட்டி பேனர் முன் நின்று செல்ஃபி எடுத்துக் கொண்டனர். இந்நிகழ்வில் வருவாய் கோட்டாட்சியர் தவச்செல்வம், மாவட்ட விளையாட்டு அலுவலர் ஞானசுகந்தி, வட்டாட்சியர் கலைவாணி மற்றும் விளையாட்டு வீரர்கள், தன்னார்வலர்கள், பொதுமக்கள் பங்கேற்றனர்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *