தேசிய தென்னிந்திய நதிகள் இணைப்பு விவசாயிகள் சங்க தலைவர் அய்யாக்கண்ணு, மற்றும் விவசாயிகள் மத்திய அரசு கொண்டுவந்த 3 வேளாண் சட்டங்களை திரும்பப் பெற வேண்டும். நரேந்திர மோடி அறிவித்த படி வேளாண் விளைபொருள்களுக்கு இரண்டு மடங்கு லாபம் தர வேண்டும். காவிரி டெல்டா பகுதியில் தேக்கம் அடைந்துள்ள நெல்மணிகளை உடனே கொள்முதல் செய்ய வேண்டும் என்பன உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி கடந்த 34 நாட்களாக கரூர் பைபாஸ் ரோடு மலர் சாலையிலுள்ள அய்யாக்கண்ணு இல்லத்தில் உண்ணாவிரதப் போராட்டம் நடத்தி வருகின்றனர்.
நாளும் பல்வேறு விதமான வடிவங்களில் போராட்டம் நடத்தும் அய்யாக்கண்ணு நரேந்திரமோடியை அவமதிப்பதாக பா.ஜ.க. குற்றம் சாட்டியது.

இந்த நிலையில் இன்று அய்யாக்கண்ணு இல்லத்தை முற்றுகையிடும் போராட்டத்தில் பா.ஜ.க.வினர் ஈடுபட்டனர். திருச்சி மாநகர் மாவட்ட பா.ஜ.க .தலைவர் ராஜசேகரன் தலைமையில் நடந்த இந்த போராட்டத்தில் மாநில வர்த்தக அணி செயலாளர் எம்.பி. முரளிதரன், உறையூர் மண்டல் தலைவர் தர்மராஜ், வர்த்தக அணி ராம்குமார், சுபேந்திரன், மாவட்ட துணைத் தலைவர் இந்திரன், மாவட்ட செயலாளர்கள் கள்ளிக்குடி ராஜேந்திரன், எம்பயர் கணேசன், தொழில்நுட்ப பிரிவு ஸ்ரீராம் ,காளீஸ்வரன் மாநில செயற்குழு உறுப்பினர்கள் மோகன், பார்த்திபன் ,விவசாய அணி கோவிந்தராஜ், செல்வதுரை நாகேந்திரன், வக்கீல் பன்னீர்செல்வம், மார்க்கெட் மண்டல் தலைவர் சதீஷ்குமார், ஒண்டி முத்து ,நல்லி செல்வம் ,கௌதம் நாகராஜன், லீமா சிவகுமார் உள்ளிட்ட கட்சி பிரமுகர்கள் திரளாக பங்கேற்றனர்.
இதையடுத்து போலீசார் அவர்களை மெயின் ரோட்டில் இரும்பு தடுப்பு வேலி அமைத்து தடுத்து நிறுத்தினர். அதைத்தொடர்ந்து பா.ஜ.க.வினர் சாலையோரம் அமர்ந்து அய்யாக்கண்ணு வை கைது செய்ய கோரி கோஷம் எழுப்பினர். பின்னர் அவர்கள் கலைந்து சென்றனர்.

மேலும் ராஜசேகரன் கூறும்போது, போலீசார் வேண்டுகோளுக்கு இணங்க இந்த போராட்டத்தை இத்துடன் முடித்துக் கொள்கிறோம். பிரதமர் நரேந்திர மோடியை அவமதிக்கும் அய்யாகண்ணு மீது வழக்குப்பதிவு செய்து அவரது போராட்டத்திற்கு முற்றுப்புள்ளி வைக்கா விட்டால் நாளை முதல் பா.ஜ.க.வினரும் போலீஸ் மற்றும் அய்யாக்கண்ணு வை கண்டித்து தொடர் போராட்டம் நடத்துவோம்” என்றார்.

Leave a Reply

Your email address will not be published.