இந்திய நாட்டின் 75 வது குடியரசு தினம் நாடு முழுவதும் இன்று கொண்டாடப்பட்டு வருகிறது. அந்த வகையில் திருச்சி மாநகராட்சி மைய அலுவலகத்தில் நடைபெற்ற குடியரசு தின விழாவில் மாநகராட்சி ஆணையர் வைத்திநாதன், துணைமேயர் திவ்யா ஆகியோர் முன்னிலையில் மாநகராட்சி மேயர் அன்பழகன் இன்று தேசியக் கொடியை ஏற்றி வைத்து மரியாதை செலுத்தினார். தொடர்ந்து மாநகராட்சியில் மாசற்ற முறையில் 25 ஆண்டுகள் பணி நிறைவுசெய்த 19 நபர்களுக்கு ரூ.2000 ரொக்கம் மற்றும் பாராட்டு சான்றிதழ்களை வழங்கினார்.

மேலும் தேசிய அளவிலான கணக்கெடுப்பு ஸ்வச் சர்வேக்ஷன் 2023 ன்படி தமிழகத்தின் தூய்மையான நகரமாக திருச்சிராப்பள்ளி மாநகரம் முதல் இடம் பெற்றதற்கு உறுதுணையாக சிறப்பான முறையில் பொது சுகாதார பணிகளை மேற்கொண்ட அலுவலர்களை கவுரவித்து பாராட்டி கேடயம் மற்றும் நற்சான்றிதழ்களை வழங்கினார்.

தொடர்ந்து எடமலைப்பட்டிபுதூர் மாநகராட்சி பள்ளி மாணவ, மாணவிகளின் கலை நிகழ்ச்சி நடைபெற்றது. இவ்விழாவில் நகரப்பொறியாளர் சிவபாதம், நகர் நல அலுவலர் மணிவண்ணன், மண்டலத்தலைவர்கள் ஆண்டாள்ராம்குமார், மதிவாணன், துர்காதேவி, விஜயலட்சுமி கண்ணன், ஜெயநிர்மலா உள்பட மாமன்ற உறுப்பினர்கள், மாநகராட்சி உதவி ஆணையர்கள், மாநகராட்சி அலுவலர்கள் பலர் கலந்து கொண்டனர்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *